மதுரை : மதுரையில் முதன் முறையாக உ.பி., முதல்வர் மாயாவதி நாளை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார். கட்சியின் தேசிய பொதுச் செயலர் சுரேஷ் மானே, நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அளவில் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி, தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக திகழும். தமிழக கட்சிகளின் கூட்டணிகள், சந்தர்ப்பவாத கூட்டணி. இது நிலையானதல்ல.
தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக 3வது கட்சியை பொதுமக்கள் விரும்புகின்றனர். தமிழகத்தில் 25 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் தனித்து நின்று 6 சதவீதத்திற்கும் மேலான ஓட்டுக்களை பெற்று, முக்கிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும். இதற்கான பிரசாரக் கூட்டம் மதுரை மேற்குமாசிவீதி - வடக்கு மாசிவீதி சந்திப்பில் நாளை மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது. இதில், கட்சியின் தேசியத் தலைவரும், உ.பி., முதல்வருமான மாயாவதி பேசுகிறார். கட்சியின் தேர்தல் அறிக்கை, பிரசார "டிவிடி'யை வெளியிடுகிறார்.
தமிழகத்தில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பிராமணர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என பலதரப்பினரும் உள்ளனர். மீதியுள்ள தொகுதிகளின் வேட்பாளர்கள் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளனர். இவ்வாறு சுரேஷ் மானே கூறினார்.
Ref: www.dinamalar.com
http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=8770&cls=&ncat=TN