மதுரை : மதுரையில் அரசு பஸ்களை சேதப்படுத்துவோரை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் போலீஸ் கமிஷனர் கே.நந்தபாலன் எச்சரிக்கை விடுத்தார். அவர் அளித்த பேட்டி: மதுரை நகரில் அரசு பஸ்களை சேதப்படுத்தியது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ்கள் மீது கல் வீச்சில் ஈடுபடுவோர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர். தேவைப்பட்டால், அவர்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது கைது செய்யப்பட்ட 12 பேரை, குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கலாமா என பரிசீலிக்கப்படுகிறது.
நகரில் இரவு ரோந்து பணியில், மூன்று துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பிற இடங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பிரச்னைகள் இருந்தாலும், மதுரை சட்டக்கல்லூரியில் எந்த பிரச்னையும் இல்லை. கமிஷனராக நான் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில், 125 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. இன்னும் 15 பேர் மீது, இச்சட்டத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நகரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், மறியல், தர்ணா நடத்துவோர் கைது செய்யப்படுவர். மதுரை மீனாட்சி கோவிலில் தற்போது கூடுதலாக மேற்கு கோபுர வாசலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் பாதுகாப்பில் எந்த தளர்வும் இல்லை. ஒரு உதவி கமிஷனர் தலைமையில் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு நந்தபாலன் கூறினார்.
No comments:
Post a Comment