Friday, January 28, 2011

ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பது தேவையற்ற செயல்






ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை அகற்ற அனைத்து முயற்சிகளையும் புதிய தமிழகம் செய்து வருகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி முதல், கிராமம் தோறும் பிரசாரம் செய்ய உள்ளேன். தி.மு.க.,வினர் கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்த இரண்டு ஏக்கர் விவசாய நிலம், மூன்று சென்ட் இலவச வீட்டுமனை போன்ற திட்டங்கள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் தற்போதும் புதிது புதிதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என கனவு காண்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. எதிர்கட்சிகள் லோக்சபா கூட்டுக்குழு விசாரணை கேட்டும் மத்திய அரசு அதை மறுத்து வருகிறது. இதனால் வரும் ஊழலுக்கு துணை புரியும் காங்.,கட்சியும் தேர்தலில் தோல்வியை சந்திக்கும். தி.மு.க, அரசு செய்யும் தவறுகளுக்கு மத்திய அரசு பாதுகாவலனாக இருந்து வருகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து அக்கட்சி பொது செயலாளர் ஜெயலலிதா தான் முடிவு செய்வார்.
தமிழகமெங்கும் தி.மு.க.,வுக்கு எதிராக மக்கள் திரண்டு வருகின்றனர். தேவேந்திர குல வேளாளர்களை ஒருங்கிணைக்க ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பது தேவையற்ற செயல். ஆட்சிக்கு வந்து, ஐந்தாண்டுகளாகியும் விலைவாசி உயர்வு உட்பட மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணாமல், மாநில அரசு, வீணடித்துவிட்டது. ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தியும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. விவசாயிகளை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறி வருகிறது, என்றார்.

Thursday, January 27, 2011

கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிப்போம்

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2011,00:16 IST

தூத்துக்குடி, : கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிப்போம் என்றும், இல்லையென்றால் வரும் தேர்தலில் மள்ளர் இலக்கிய கழகம் தனித்து போட்டியிடும் என்றும் அதன் தலைவர் சுப.அண்ணாமலை தெரிவித்தார்.
இது குறித்து மள்ளர் இலக்கிய கழகத் தலைவர் சுப.அண்ணாமலை தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது; பள்ளன், பன்னாடி, குடும்பன், காலாடி, மூப்பன், வாதிரியான் மற்றும் தேவேந்திரகுலத்தான் என அழைக்கப்படுகின்ற மக்களை ஒரே இனமாக தேவேந்திரர் அல்லது தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி மள்ளர் இலக்கிய கழகம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 31ம் தேதி மதுரையில் வைத்து மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை பட்டியல் இன மரபினர் நலத்துறை என அழைக்க வேண்டும். பாட நூல்களில் கட்டபொம்மன் வரலாற்றுடன் சுந்தரலிங்கனார் வரலாற்றையும் சேர்க்க வேண்டும். ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள ஆவரங்காடு வெடிமருந்து கிடங்கினை தமிழக அரசு வரலாற்று சின்னமாக மாற்ற வேண்டும். காசிலிங்கபுரத்திலுள்ள சுந்தரலிங்கனார் சிலையை திறப்பதற்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். வாகைகுளம் விமான நிலையத்திற்கு சுந்தரலிங்கனார் பெயரினை சூட்ட வேண்டும். ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராம மக்கள் சுற்றுப்புற சீர்கேட்டினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அதேபோல் வேலாயுதபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மின் உற்பத்தி ஆலை 25 கிராமத்திற்குரிய மழைநீர் ஓடையை ஆக்கிரமித்துள்ளது. அதனை தமிழக அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுப்பதோடு, இந்த கம்பெனியில் உள்ளூர் கிராம மக்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மள்ளர் இலக்கிய கழகம் சமுதாய மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் இயக்கம் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கட்சிக்கு ஆதரவு அளிப்போம். இல்லையெனில் மள்ளர் இலக்கிய கழகம் தனித்து தேர்தலில் போட்டியிடும்.
17 மாவட்டங்களில் பெரும்பான்மையுடன் இருப்பதோடு, 21 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி எங்களுக்கு உள்ளது என்றார். அப்போது மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் செல்லையாபாண்டியன், கலை இலக்கிய அணிச் செயலாளர் சின்னகனி, வக்கீல் ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தேவேந்திர குல வேளாளர் சுய மரியாதை மீட்பு பயணம்




தேவேந்திர குல சொந்தங்களே வணக்கம்.
தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க தமிழக அரசு திரு .ஜன்னார்தனம் நீதி அரசர் தலைமையில் ஒரு நபர் கமிசன் அமைத்துள்ளது.
தேவேந்திர குல வேளாளர் என்று உடனடியாக அறிவித்து இருக்க வேண்டும்.
பிப்ரவரி 2011 க்குள் அறிவிக்கப்பட வேண்டும்.
இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆக்கப்பூர்வமாக முடிவு எடுங்கள் சொந்தங்களே.
தேர்தலுக்கு முன் நடந்தாக வேண்டும் .
தேவேந்திர குல வேளாளர் சுய மரியாதை மீட்பு பயணம் வரும் பிப்ரவரி மதம் 12 ம் தேதி மதுரையில் இருந்து பெரியவர்களால் துவக்கி வைக்கப்பட்டு 10 நாட்கள் தென் மாவட்டங்களில் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.

இவண்.
தேவேந்திர குல வேளாளர் ஒருங்கிணைப்புப் பேரவை

தேசம் இளைஞர் நலசங்கம்
தேவேந்திரர் ஊழியர் நல கூட்டமைப்பு

Wednesday, January 26, 2011

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும்; அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும் என்றும்; தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம. தங்கராஜ் அளிக்கப்பட்ட கோரிக்கை கடையநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மூலமாக தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்தக் கோரிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில், நிதியமைச்சர் அன்பழகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி, பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், எஸ். பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறைச் செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்தக் கோரிக்கையைச் சட்ட ரீதியாகப் பரிசீலித்து நடைமுறைப்படுத்திட; நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு அமைத்து, பரிந்துரை பெறலாம் என்று முதல்வர் கலைஞர் இன்று (26 1 2011) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Friday, January 7, 2011

Top 10 corruptions in India

ஊழல் செய்வதிலும் கணக்கு எடுக்க வேண்டாமா? எல்லாவற்றிலேயும் இந்த வருடத்தின் டாப் டென் பார்த்தாச்சு......இதிலும் பார்த்துவிடுவோம்.......
இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி ( தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா )
இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2.
சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:
இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!
இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.
இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.
சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!
மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.
இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)
லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)
ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.
பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)
கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)
தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)
ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)
உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)
பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.
இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!

நான் படித்து மலைத்து போய்விட்டேன்....நீங்களும் மலைக்க வேண்டாமா......அதற்காகத்தான் இதை பகிர்ந்துள்ளேன்........

I-King