தூத்துக்குடி, : கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிப்போம் என்றும், இல்லையென்றால் வரும் தேர்தலில் மள்ளர் இலக்கிய கழகம் தனித்து போட்டியிடும் என்றும் அதன் தலைவர் சுப.அண்ணாமலை தெரிவித்தார்.
இது குறித்து மள்ளர் இலக்கிய கழகத் தலைவர் சுப.அண்ணாமலை தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது; பள்ளன், பன்னாடி, குடும்பன், காலாடி, மூப்பன், வாதிரியான் மற்றும் தேவேந்திரகுலத்தான் என அழைக்கப்படுகின்ற மக்களை ஒரே இனமாக தேவேந்திரர் அல்லது தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி மள்ளர் இலக்கிய கழகம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 31ம் தேதி மதுரையில் வைத்து மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை பட்டியல் இன மரபினர் நலத்துறை என அழைக்க வேண்டும். பாட நூல்களில் கட்டபொம்மன் வரலாற்றுடன் சுந்தரலிங்கனார் வரலாற்றையும் சேர்க்க வேண்டும். ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள ஆவரங்காடு வெடிமருந்து கிடங்கினை தமிழக அரசு வரலாற்று சின்னமாக மாற்ற வேண்டும். காசிலிங்கபுரத்திலுள்ள சுந்தரலிங்கனார் சிலையை திறப்பதற்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். வாகைகுளம் விமான நிலையத்திற்கு சுந்தரலிங்கனார் பெயரினை சூட்ட வேண்டும். ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராம மக்கள் சுற்றுப்புற சீர்கேட்டினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அதேபோல் வேலாயுதபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மின் உற்பத்தி ஆலை 25 கிராமத்திற்குரிய மழைநீர் ஓடையை ஆக்கிரமித்துள்ளது. அதனை தமிழக அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுப்பதோடு, இந்த கம்பெனியில் உள்ளூர் கிராம மக்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மள்ளர் இலக்கிய கழகம் சமுதாய மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் இயக்கம் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கட்சிக்கு ஆதரவு அளிப்போம். இல்லையெனில் மள்ளர் இலக்கிய கழகம் தனித்து தேர்தலில் போட்டியிடும்.
17 மாவட்டங்களில் பெரும்பான்மையுடன் இருப்பதோடு, 21 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி எங்களுக்கு உள்ளது என்றார். அப்போது மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் செல்லையாபாண்டியன், கலை இலக்கிய அணிச் செயலாளர் சின்னகனி, வக்கீல் ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment