செப்டம்பர் 11 – 2011 பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை
கடந்த 11.09.2011 அன்று தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1. பல்லவராயனேந்தல் கணேசன் 2.வீரம்பல் பன்னீர் 3. மஞ்சூர் ஜெயபால், 4. சடையனரி முத்துக்குமார் 5. கீழகொடுமலூர் தீர்ப்புக்கனி 6. காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கொல்லப்பட்டனர். இளையான்குடி துப்பாக்கிச் சூட்டில் ஆனந்த் என்ற மாணவன் குண்டடிபட்டான். மதுரையிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1. ஜெயப் பிரகாஷ், 2. பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமுற்றனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு சார்பில் உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உண்மைகளை கண்டறிந்தது.
குழு உறுப்பினர்கள்
1. சி. ராஜு, வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.
2. சே. வாஞ்சிநாதன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை
3. திருமுருகன், வழக்கறிஞர் உயர்நீதிமன்றம், மதுரை
4. சுப.ராமச்சந்திரன், வழக்கறிஞர்,
5. அரிராகவன், வழக்கறிஞர்,
6. ப. நடராஜன், வழக்கறிஞர்,
7. சி. ராஜசேகர், வழக்கறிஞர்,
8. ம. லயனல் அந்தோணிராஜ்
____________________________________________________
2011 செப்டம்பர் 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு மூன்றாகப் பிரிந்து துப்பாக்கிச் சூடு நடந்த பரமக்குடி ஐந்து முக்கு சாலை, மதுரை சிந்தாமணி, இளையான்குடி புறவழிச்சாலை துப்பாக்கிச் சூடு தடியடியில் இறந்த காயமடைந்த நபர்களின் வீடுகள், காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மதுரை, இராமநாதபுரம் அரசு மருத்துவமனைகள், பரமக்குடி சம்பவத்திற்கு மூலக் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சொல்லப்பட்ட மாணவர் பழனிக்குமார் கொலை நடந்த கமுதி, மண்டல மாணிக்கம், பள்ளபச்சேரி கிராமம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக மக்களை சந்தித்து விசாரித்தும் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை, குற்ற எண்கள்.300, 459, anan& 33/2011இ மருத்துவமனை tவிபத்துபதிவேடு அறிக்கைகள், ஆப்பநாடு மறவர் சங்க அறிவிப்பு சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட வீடியோ சி.டி. உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்தும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியது.
தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் குருபபூஜை விழா!
தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும் பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர். ஆதிக்க தேவர் சாதி வெறியர்களால் அவர் பரமக்குடியில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி 33 வயதில் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இம்மானுவேல் சேகரன் நினைவிடம் பரமக்குடி கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ளது. ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கான தலித் மக்கள் குருபபூஜை நாளில் வருகை தருகின்றனர். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் காவடி எடுப்பதும், சிலம்பாட்டம் ஆடுவதும், வருகின்ற மக்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல், புத்தக கடை விற்பனை தியாகி இமானுவேல் சேகரன் படம் அச்சடித்த பனியன் விற்பனை என்று கோவில் திருவிழாவில் கடவுளை வணங்குவது போல தியாகி இம்மானுவேல் நினைவு நாளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.
இதை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த தலித் மக்களின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டு அதற்கான ஆதரவும் பெருகி வரும் வேளையில் இந்த ஆண்டு தலித் மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, லத்தி சார்ஜ், பொய் வழக்கு, கைது சிறை 144 தடை உத்தரவு என்ற வகையில் செயல்பட்டுள்ளது. போலீசின் அச்சுறுத்தலால் ஆண்கள் இரவில் வீட்டில் தங்காமல் வெளியில் சென்று பதுங்கும் நிலைமையில் உண்மை அறியும் குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.
‘’இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மண்டல மாணிக்கம், பள்ளபச்சரி கிராமத்தில் சிறுவன் பழனிக்குமாரி படுகொலையால் பதற்றம் ஏற்பட்டதால் ஜான்பாண்டியன் 11.09.2011 அன்று தூத்துக்குடி வல்லநாட்டில் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார் பரமக்குடியில் ஐந்து முக்கு சாலையில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் செய்தனர். அதன்பிறகு 12.30 க்கு மேல் கலவரம், தீ வைப்பு, கல் வீச்சு என ஈடுபட்டதில் காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது அதனால் தற்காப்புக்காகவும் பொதுச் சொத்தைப் பாதுகாக்கவும் தடியடி கண்ணீர் புகை வீச்சு துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ஆறு பேர் பலியாகிவிட்டனர்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது.
மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், “மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன” என்று கூறினார்.
கூடுதலாக அரசு தரப்பின் கூற்றை பரமக்குடி நகர் காவல்நிலைய குற்ற எண். 300/2011ன் படியான முதல் தகவல் அறிக்கை மூலம் அறியலாம். இப்புகாரை பரமக்குடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் அளித்து 1000 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி நகர காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கொடுத்த புகாரில் “சுமார் 1000 பேர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் ஐந்து முக்கு சாலையில் மறியல் செய்தனர். துணை ஆணையர் செந்தில்வேலன் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், தாசில்தார் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். “நீங்கள் கூடியிருப்பது சட்டவிரோத கூட்டம் கலைந்து போங்கள் என்றோம் செவி சாய்க்காமல் அவதூறாக பேசி காலித்தனமாக போக்குவரத்தை தடைபடுத்தி வாகனங்களை தாக்க முற்பட்டார்கள். கும்பலைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்த வட்டாட்சியர் வாய்மொழியாக உத்தரவிட்டார். கலவரக் கும்பல் கலைந்து போகவில்லை. கணேசன், ஜெயபால், வெள்ளைச்சாமி, மாணிக்கம், தீர்த்தகனி ஆகியோர் வெறி கொண்டு எங்களை நோக்கி கற்களை எறிந்தனர். உடனே வட்டாட்சியர் தடியடி நடத்தி கலவரக் கும்பலைக் கலைக்க சொன்னார். அங்கு வந்த டி.எஸ்.பி. யும் கலைந்து போகச் சொன்னார். ஆனால் போகவில்லை. குறைந்த பட்சம் தடியடி நடத்தப்பட்டது. அப்போதும் போகவில்லை.”
“எங்களை நோக்கி கல்லால் தாக்க ஆரம்பித்தனர். நாங்கள் பின்வாங்கினோம். அந்த சமயத்தில் 14 வாகனங்களுக்கு தீ வைத்து அடித்து நொறுக்கினார்கள். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீ வைத்தார்கள். அப்போது டி.ஐ.ஜி சந்தீப் மிட்டலுக்கு தலையிலும், அடையாறு துணை ஆணையா டாக்டர் செந்தில்வேலனுக்கு வலது கையிலும் டி.எஸ்.பி. கணேசனுக்கு வலது காதிலும் மேலும் பல போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கும் காயம் ஏற்பட்டது. மேற்கொண்டு உயிர்சேதம், பொருட் சேதத்தை தடுக்கும் பொருட்டு கலவரக் கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைக்க நேரிடும் எனவும் உடனே கலைந்து செல்ல வாய்மொழி உத்தரவிட்டார். துணை ஆணையர் செந்தில்வேலனும் அவ்வாறு எச்சரித்தர். கலவரக் கும்பல் மிகக் கொடூரமாக தாக்கவும் பரமக்குடி வட்டாட்சியர் துப்பாக்கியால் சுட்டு கலைக்க எழுத்து மூலமாக உத்தரவு வழங்கினர்”. இவ்வாறு புகார் பதிவு செய்துள்ளனர்.
சம்பவ சாட்சிகளின் வாக்குமூலங்கள் :
பரமக்குடி துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறும் பொழுது, “காலை சுமார் 11.30 மணிக்கு பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டுக்கு வந்தேன். அப்போது சுமார் 50க்கும் குறைவான நபர்களே கைது செய்யப்பட்ட ஜான்பாண்டியனை விடுதலை செய்யக் கோரி மறியல் நடத்தினர். போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஆய்வாளர் சிவக்குமார், ஆயுதப்படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி, டி.எஸ்.பி. கணேசன், துணை ஆணையர் செந்தில்வேலன் ஆகியோர் கூடியிருந்தவர்களை கலைந்து போக பேசினர். நேரம் ஆக ஆக குருபூஜைக்கு வந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் எண்ணிக்கையில் அதிகரித்தது. அவர்களிடம் உரிய அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் எந்த முன்அறிவிப்பும் இன்றி துணை ஆணையர் செந்தில்வேலன் திடீரென தடியடி நடத்தினார். மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். போலீஸினுடைய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் பலபேர்களின் மண்டை உடைந்தது. சிதறி ஓடிய நபர்கள் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டனர். உடனே ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆய்வாளர் கந்தமுனியசாமி, டி.எஸ்.பி. கணேசன் ஆகியோர் துப்பாக்கியால் சூட்டனர். மூன்று பேர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். பல பேருக்கு மண்டை உடைந்தது. சம்பவம் போர்களம் போல் காட்சியளித்தது.
காமராஜ் என்பவர் சொல்லும் போது, “எங்க அப்பா செல்லத்துரை வாத்தியார், தியாகி இமானுவேலுக்குப் பிறகு இரண்டாவதாக மறவர்களால் படுகொலை செய்யப்பட்டவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடியவர். துணை ஆணையர் செந்தில்வேலன் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக இருக்கும் பொழுது எங்க அப்பாவின் நினைவுநாளுக்கு பூஜைக்காக அனுமதி கேட்டேன். அதற்கு செந்தில்வேலனோ உங்க அப்பா படத்தை வீட்டிலேயே வைத்து பூஜை செய் வெளியிலே எதற்கு கொண்டு வருகிறாய். நடத்தக்கூடாது என்று சொல்லியதுடன் அருகில் இருந்த ஆய்வாளர் மூலம் வெளியே போகச் சொல்லிவிட்டார். ஆனால் நாங்கள் மீறி நடத்தினோம். இந்த ஆண்டு குரு பூஜையில் எஸ்ஸி/.எஸ்.டி. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக தியாகி “தெய்வத்திருமகன்’’ இமானுவேல் சேகரன் என்று பிளக்ஸ் போர்டு வைத்தனர். தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். போலீசிடம் சென்று போர்டை அகற்ற புகார் கொடுத்தனர். மேலும் போக்குவரத்துத் துறையின் மேலாளர் மூலமாக எஸ்ஸி/.எஸ்.டி. அரசு ஊழியர்களை மிரட்டியதாலும் தெய்வத்திருமகன் என்பதை மட்டும் அழித்துவிட்டோம்.”
“இரண்டு நாட்கள் முன்பாக ’’அவங்க எதுவானாலும் வைக்கட்டும் இவர்கள் எப்படி பங்சன் நடத்துகிறார்கள் என்று பார்ப்போம’’ என்று தேவர் சாதியைச் சேர்ந்த சிலர் பேசி வந்தனர். இந்த ஆண்டு குருபூஜையை நடத்தக்கூடாது என பல்வேறு இடையூறுகளை தேவர் சாதியினர் செய்து வந்தனர். இதற்கு காவல்துறை முழுஅளவில் ஒத்துழைக்கிறது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் தரை தளம் உலர்வதற்குள் தேவர் பேரவை என எழுதி வைத்ததுடன் அந்த இடத்தில் மலம் கழித்து அசிங்க படுத்தி சென்றனர். இது வெளியில் பல பேருக்கு தெரியாது. போலீசிடம் சொல்லியதுடன் நகராட்சியில் மூலம் அகற்றினோம்.”
“சம்பவ தினத்தன்று போலீஸ் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. வஜ்ரா வாகனத்தில் தண்ணியே இல்லை. அதை பயன் படுத்தாமல் போலீசாரே தீ வைத்துக் கொளுத்தினர். பொது மக்களுடைய பைக், கார் போன்றவற்றை போலீசாரே அடித்து சேதப்படுத்தினர். ஆய்வாளர் சிவக்குமார் இரண்டு கையிலும் துப்பாக்கி வைத்து மக்களைப் பார்த்து சுட்டுள்ளார். ஆறு பேரை படுகொலை செய்ததோடு பலரை கொடூரமாக தாக்கியுள்ளனர். 1000 பேர் மீது வழக்குப் போட்டு கிடைப்பவரை கைது செய்வதற்காக கிராமம், கிராமமாக மக்களை அச்சுறுத்த தேடுதல் வேட்டை செய்கிறது. மக்கள் காடுகளிலும், வயல்வெளிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். பரமக்குடி நகரத்தில் தியாகி இமானுவேல் குருபூஜைக்காக வைத்த பிளக்ஸ் பேனர்கள்; அனைத்தையும் போலீசு கிழித்து கையிலே வைத்துக் கொண்டு அதில் உள்ள பெயர்களை வழக்கிலே சேர்த்து கைது செய்ய கிராமங்களுக்கு செல்கிறது. இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு பெருகி வலுவடைந்து வருகிறது. இதை தடுப்பதற்காகவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இது சாதி மோதல் கிடையாது. சாதி வெறியோடு தலித் மக்கள் மீது நடத்திய போலீஸ் தாக்குதல். இந்த படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.”
வழக்கறிஞர் முத்துக்கண்ணன் கூறும் பொழுது, “போலீஸ் தான் கலவரத்தைத் தூண்டியது. காலை 6 மணி முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் 50 பேர் தான் சாலை மறியல் செய்தனர். போலீஸ் நினைத்திருந்தால் இந்த துப்பாக்கிச் சூட்டை, லத்தி சார்ஜை தவிர்த்திருக்கலாம். சசிகலா நடராஜனின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது. தேவர் சாதிக்காரர்களை கூப்பிட்டு பேசியிருக்கிறார். குருபூஜை நடத்தக்கூடாது என்று போலீசை தூண்டிவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது சாதிக்கலவரமாக சித்தரிக்க போலீஸ் முயல்கிறது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைக் கூட சாதி வெறியோடு போலீஸ் எட்டி உதைத்திருக்கிறது. ஆறு பேரில் சிலரை காட்டுமிராண்டித் தனமாக போலீசு; அடித்தே கொன்றிருக்கிறது. இந்த படுகொலைக்கு காரணமான ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆணையர் செந்தில்வேலன், டி.எஸ்.பி. கணேசன், டி.ஐ.ஜி.சந்தீப் மிட்டல் ஆகியோர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றார்.
சிவா, வடிவேல் ஆகியோர்கள் கூறும் பொழுது, “பகல் 12 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் மாலை ஆறு மணி வரை நீடித்தது. துப்பாக்கிச் சூடு நடந்த பிறகும் நான்கு பேர்கள் பிணமான பிறகு கூட அவர்களை தூக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக போலீசு மீது தொடர்ந்து கல் எறிவதும் தாக்குவதும் பிறகு பின்வாங்குவதும் என்று மூர்க்கமாக மக்கள் போராடினார்கள். இந்த சம்பவத்தால் பல்வேறு ஊர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசால் திருப்பி அனுப்பப்பட்டனர். இது தலித் மக்கள் மீது நடந்த அநியாய தாக்குதல்”.
பரமக்குடியில் நகர காவல்நிலையம் எதிரே அலுவலகம் நடத்தி வரும் வழக்கறிஞர் பசுமலை கூறும் பொழுது “ஆப்பநாடு மறவர் சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் முதுகுளத்தூர் தேவர் திருமண மஹால் தொடர்பான சொத்துப் பிரச்சனையை பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம்” என்ற செய்தியைச் குறிப்பிட்டு தொடர்ந்து “நமது ஐயா பசும்பொன் தேவர் அவர்கள் குருபூஜையை நடத்துவது போல் பெரும் ஆதரவு பெறும் இமானுவேல் குருபூஜை வருடா வருடம் கூட்டம் அதிகமாகி அரசு விழாவாக நடத்த அனுமதி வழங்கவிடாமல் தடுப்பதற்காகவும் கிராம வாரியாக கீழத்தூவல் கிராமத்திற்கு திரண்டு வர வேண்டும் என்று சம்பவத்திற்கு முன்பே குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர். இமானுவேல் குருபூஜையை தடுக்க வேண்டுமென்று போலீசும், தேவர் சாதியினரும் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் இதற்கு முன்பு வெள்ளைச்சாமி என்பவரை கொடூரமாக தாக்கியதில் அவருக்கு எதிராக தேவேந்திர குல மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதனால் காழ்ப்புணர்ச்சியுடனே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்”.
“மாவட்ட ஆட்சியர் அருணாராய் சம்பவ இடத்திற்கும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கும் அன்று முழுவதும் வரவில்லை. வருவாய் துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் சுமூகத் தீர்வு ஏற்பட்டிருக்கும் மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கோ காயம்பட்டு மருத்துவமனையில் இருப்பவருக்கோ மாவட்ட ஆட்சியர் எந்த ஆறுதலும் நேரில் சென்று கூறவில்லை. துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஜெயபால் என்ற இளைஞனை மனித நேயமற்ற நிலையில் இறந்த நாயை தூக்கிச் செல்வது போல் போலீசார் தூக்கிச் சென்றனர். இந்த படுகொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரியின் மீது கொலை வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் காயமடைந்தோர் மதுரை அரசு மருத்துவமனையில், இராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று வருவதில் 10 நபர்களுக்கு துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளது. ஆறுமுகசாமி என்பவருக்கு லத்தியால் தாக்கப்பட்டதால் 9 காயங்கள ஏற்பட்டுள்ளது. தர்மராஜ் என்பவருக்கு 13 காயங்கள் எலும்பு முறிவுடன் சோந்து ஏற்பட்டுள்ளது. முகம், உடம்பில் முழுவதும் காயங்கள் உள்ளது. இதர நபர்களுக்கு லத்தியால் அடித்த காயங்கள் உடம்பில் முக்கிய பகுதிகளில் உள்ளன.
இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெள்ளைச்சாமி (வயது 70) அவரைச் சந்தித்தோம், “சம்பவத்தன்று நானும் இருந்தேன். ஐந்து முக்கு சாலையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் ஜான்பாண்டியனை விடுதலை செய்யுங்கள், உங்களுக்கு கைது செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது. அக்டோபர் 30 அன்று தேவர் குரு பூஜையில் இப்படி நடப்பீங்களா எனக் கேட்டேன். இந்நிலையில் நாளா பக்கமும் போலீஸ் சுற்றி வளைத்துவிட்டனர். சிவக்குமார் “நீங்க என்னடா பெரிய விழா நடத்துறீங்க என்று கேவலமாக பேசினார்.” அதற்கு நான் “அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கார் எங்க சாதி தான், ஜெகஜீவன் ராம் எங்க சாதி தான், பல மொழி தெரிந்த மாயாவதி எங்க சாதி தான் என வாக்குவாதம் செய்தேன்.”
“திடீரென்று போலீஸ் லத்தியால் அடித்து மக்களை துரத்தினர். டுப் டுப் என துப்பாக்கியால் சுட்டனர். நான் ஓடி அருகில் இருந்த படிக்கட்டில் ஏறி மறைந்து கொண்டேன். மக்களை அடித்து விரட்டி விட்டு வந்த போலீசார் என்னைப் பார்த்துவிட்டனர். சட்டையைப் பிடித்து இழுத்து வாடா மாப்பிள்ளை சட்டமா பேசுற என கொடூரமாக தாக்கினர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பெரிய கம்பால் ஒரே போடாக என இடது காலில் போட்டார் பெருவிரல் நசுங்கி இரத்தம் வழிந்தது தலையில் ஒரு அடி அடித்தார். புருவத்தில் இருந்து ரத்தம் வந்தது. சுற்றியிருந்த காவலர்கள் ஆளாளுக்கு கடுமையாக தாக்கினார்கள். வெயிலில் கால் சுடுது செருப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று கேட்டேன் அதற்கு இன்ஸ்பெக்டர் உனக்கு எதுக்குடா செருப்பு பள்ளப்பயலே என அசிங்கமாக திட்டினார். கீழே விழுந்த வாட்ச்ஐ எடுக்கவிடவில்லை.”
“பிறகு போலீசார் காவல்நிலையத்தில் அடைத்து ஏண்டா பள்ளப்பயலே உங்களுக்கு குருபூஜை கேட்குதா என்று தாக்கினர். தண்ணி தவிக்குது தண்ணீர் கொடுங்க அவசரமா யுரின் போகனும் எனக் கேட்டேன் போடா என விரட்டினா. சிவக்குமாரும், எஸ்.ஐ.யும் வெளியே போனவுடன் ஏட்டு ஒருவர் தண்ணீர் கொடுத்தார். சட்டை, பனியனில் இரத்தம் காய்ந்ததால் நாற்றம் எடுத்ததால் அனைத்தையும் கழற்றிவிட்டு டவுசருடன் இருந்தேன் அப்போது மதியம் சுமார் 2 மணி இருக்கும். அப்போது சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை. இரவு 10.20 மணிக்கு தான் இராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். என்னைப் போல் அடிபட்ட பலரும் இதுபோல் தான் நடத்தப்பட்டனா. என்னை அடித்த இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்று சொல்லியதுடன் உன் சட்டையை கழற்றி ஜெயிலில் தள்ளாமல் விடமாட்டேன் என்று சொன்னேன். காவல்நிலையத்தில் அடைபட்ட போது நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து என்ற பாரதியார் வரிகளை நினைத்துப் பார்த்தேன்.”
காயம்பட்ட 22 வயதான சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தவமணி மகன் ராஜ்குமார் கூறுகையில் “பரமக்குடி ஐந்து முக்கு சாலையில் மதியம் இரண்டு மணி முதல் மாலை 3.15 வரை தொடர்ந்து காவல்துறையினர் தாக்கினர். நான் உட்பட பலரும் அடிபட்டு 1 ½ மணி நேரம் சுடும் வெயிலில் கிடந்தோம். ரத்தம் வழிந்து கொண்டிருந்தது வேதனையில் துடித்தோம். தண்ணீர் கூட யாரும் கொடுக்கவில்லை’’ என்று குறிப்பிட்டார்.
காயம்பட்ட பரமக்குடி மணி நகரைச் சேர்ந்த குமார் கூறுகையில் “எனக்கு கைகளில் போலீசார் அடித்து காயம் ஏற்பட்டுள்ளது. 3.00 மணிக்கு 20 போலீசார் நான் காய்கறி வாங்க கடைக்கு சென்ற போது அடித்தனர். நான் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவன்.”
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜெயபால் வயது 20 மஞ்சூரைச் சேர்ந்தவர் அவருடைய தந்தை பாண்டி கூறும் பொழுது “என் மகன் கலப்பு திருமணம் செய்து கொண்டவன். மருமகள் நிறைமாத கர்ப்பிணி, கூலி வேலை செய்து தான் பிழைக்கிறோம். குருபூஜைக்குச் சென்றவன் பிணமாக வந்தான். பத்திரிக்கையில் அவன் நடந்து வருகிற போட்டோவும் இருக்கிறது. அவன் பிணமாக போலீசார் தூக்கி வருவதும் இருக்கிறது. அரசு கொடுத்த இழப்பீடை திருப்பித் தரப் போகிறேன். என் மகனின் படுகொலைக்கு நீதி வேண்டும். பணத்தை எளிதாக சம்பாதித்து விடலாம். என் மகனின் மார்பில் பாய்ந்த குண்டால் என் கை உள்ளே போகிற அளவுக்கு மார்பில் குழியாக இருந்தது. கீழே இருந்த சதையை எடுத்து அதில் வைத்து அழுத்தினேன். என் மகன் நான்கு பேர்களை ஒரே நேரத்தில் அடிக்கும் வலிமை உடையவன். அவனை கொன்று விட்டார்கள். நாங்கள் விடமாட்டோம்”.
பல்லவராயனேந்தல் ஊரைச் சார்ந்த கணேசன் வயது 55 துப்பாக்கிச் சூட்டில் பலியானவர். இவர் மனைவி கூறும் பொழுது “என் கணவா குருபூஜைக்கு போகவில்லை. என் மகனுக்கு 15-ம் தேதி திருமணம் அழைப்பிதழ் கொடுப்பதற்காக பரமக்குடி சென்றார். அநியாயமாக துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டார். ஆடு, மாடு வைத்துள்ளோம் அதை எல்லாம் பட்டியில் அடைப்பதற்கு வந்துவிடுவேன் என்று போனார். பந்தகால் நட்டுப் போனவர் மகன் திருமணத்திற்கு வரவில்லை. போலீஸ் இப்படி அநியாயமாக கொன்றுவிட்டது. மணப்பெண்ணை பற்றி தவறாக பேசிவிடுவார்கள் என்பதற்காக என் கணவர் விருப்படியே குறித்த தேதியில் திருமணத்தை நடத்தினோம்”.
காக்கனேந்தல் ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அவருடைய அண்ணன் மனைவி கூறும் பொழுது “போலீஸ் அநியாயமாக என் தம்பியைச் சுட்டுக் கொன்றுவிட்டது. மக்களை கொன்றதோடு மட்டுமல்லாமல்; இரவு நேரங்களில் போலீஸ் எங்களை கைது செய்கிறது. இரவு நேரங்களில் ஆண்கள் வீடுகளில் இல்லை. பாத்திர வியாபாரிகள் போல முள்ளுக்காட்டில் நின்று வேவு பார்க்கிறது. நாங்கள் நிம்மதியில்லாமல் இருக்கிறோம். என்னுடைய வீடு பரமக்குடி பொன்னையாபுரத்தில் இருக்கிறது. ஒரு சிறுவனை பிடித்து வைத்துக் கொண்டு பல போலீசார் சுற்றி நின்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். உங்க ஆட்களை இப்ப வர சொல்லு என்று தாக்கியது. நான் மாடியில் இருந்து பார்த்தேன். தெருவில் இருந்த இருசக்கர வாகனங்கள் டாக்டருக்கு சொந்தமான கார் இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். தேவர் குருபூஜையை பாதுகாப்பாக நடத்துவதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது. எங்கள் தலைவர் விழாவை நடத்தவிடாமல் தடுக்கிறது செய்தால் எல்லா குருபூஜையும் தடை செய்யட்டும் இல்லை என்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி நடத்த ஆவண செய்ய வேண்டும். இந்த அம்மா ஆட்சிக்கு வந்து இப்பவே மக்கள் மீது துப்பாக்கிச் சூடு என்றால் இவர்களுக்கு ஓட்டுப் போட்டது எவ்வளவு தவறு என்று தெரிகிறது”.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புறவழிச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்
இளையான்குடியில் தியாகி இமானுவேல் பேரவை சேர்ந்த முனியாண்டி என்பவர் கூறும் பொழுது “புறவழி சாலையில் குருபூஜைக்காக பகைவரை வென்றான் கிராமத்து மக்கள் சார்பில் பேனர் வைத்தோம். அதிகாலையில் சிலர் தியாகி இமானுவேல் படத்தின் தலையை கிழித்துவிட்டனர். இதற்காக நாங்கள் போலீசிடம் புகார் கொடுத்தோம். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. குருபூஜைக்கு செல்வதற்காக இந்திரா நகரில் 50 வாகனங்களில் நாங்கள் தயாராக இருந்தோம். பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் போலீஸ் அனுமதி மறுத்தது. இந்நிலையில் இளையான்குடி புறவழிச்சாலையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து கரைக்குடி மக்கள் சுமார் 27 பேர் சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த டி.எஸ்.பி. இளங்கோவன் எந்த அறிவிப்பும் இன்றி துப்பாக்கியால் சுட்டார். ஆனந்த் என்ற +2 படிக்கும் மாணவன் துப்பாக்கி குண்டு பட்டு கீழே விழுந்தான். பொதுமக்கள் அனைவரும் சிதறி ஓடினர். போலீசாரே ஆனந்தை மருத்துவமனையில் சேர்த்தனர். இது சம்பந்தமாக 200 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.”
“நாங்கள் கூட்டமாக சென்று துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தினீர்கள் என்று டி.ஸ்.பி.இளங்கோவனிடம் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே நான் தான் சுட்டேன் என்று சொன்னார். பிறகு யாரையும் கைது செய்யக்கூடாது என்று நாங்கள் கடுமையாக பேசினோம். இத்தனை வருடம் எந்த பிரச்சனையும் கிடையாது என்று சொன்னோம். டி.ஸ்.பி. மறவர் இனத்தைச் சேர்ந்தவர் நயினார் கோவில் அருகில் உள்ள சாதி ஆதிக்கம் மிகுந்த அக்கிரமேசி ஊரைச் சேர்ந்தவர். இவர் தேவர்களுக்கு சாதகமாக சாதி உணர்வோடு நடக்கிறார்.“
ஆனந்தினுடைய தாயார் செல்லம்மாள் ‘’என் மகன் டியூசன் போனான் அநியாயமாக போலீஸ் சுட்டுவிட்டனர். தற்பொழுது மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்’’.என்றார்.
பகைவரை வென்றான் ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு கூறும் பொழுது “நாங்கள் வைத்த பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசோடு போராட்டம் நடத்தியதால் குருபூசைக்கு கிளம்ப காலதாமதம் ஆகிவிட்டது. இல்லாவிட்டால் நாங்களும் பரமக்குடி போயிருப்போம். இந்த விழாவை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதை சீர்குலைக்கவே பேனர் கிழிப்பு காவல்துறையும் துணை போகிறது. இளையான்குடியில் துப்பாக்கி சூடே இல்லை என்று காவல் துறை மூடி மறைக்கப் பார்க்கிறது. டி.எஸ்.பி.இளங்கோவன் மருத்துவர்களிடமும் குண்டடிபட்ட ஆனந்தின் பெற்றோர்களிடமும் பேசி சரிகட்ட முயற்சிக்கிறார். தியாகி இமானுவேல் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். எங்களின் நியாயமான இக்கோரிக்கையை அமைப்பு பாகுபாடு கட்சிப் பாகுபாடு இலலாமல் அனைவரும் ஆதரிக்கின்றனர்”.
மதுரை சிந்தாமணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்
11.09.2011 அன்று மதுரை, சிந்தாமணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் காளியம்மாள் என்ற முதல்நிலை காவலரிடம் புகாரைப் பெற்று 38 நபர்கள் மீது குற்ற எண்.459/ 2011 yஇ.த.ச 147, 148, 188, 341, 322, 336, 353, 307 & 3 (1) தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகரில் குருபூஜைக்கு வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், புகார்தாரரான காளியம்மாள் என்ற தலித் பெண் காவலரை மானபங்கப்படுத்த முயற்சி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தைப் பற்றி நாங்கள் விசாரித்த பொழுது மதுரை சிந்தாமணியில் இருக்கும் முனியாண்டி மகன் துரைப்பாண்டி, கிருஷ்ணன் ஆகியோர் சொன்னது “11.09.2011 அன்று காலை 11 மணிக்கு புலியூர் என்ற ஊரிலிருந்து திறந்த வேனில் குருபூஜைக்கு வந்தவர்களை அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் சண்முகம் அடித்துத் திருப்பி அனுப்பிவிட்டார். அந்த நேரத்தில் பாட்டம் கிராமத்தில் இருந்து குருபூஜைக்குச் செல்ல வந்து கொண்டிருந்தனர். சிந்தாமணியைச் சேர்ந்த உள்ளுர்வாசிகளும் அப்போது இருந்தனர். திடீரென சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் மற்றும் போலீசாரும் லத்தியால் கொடூரமாக தாக்க ஆரம்பித்தனர். பால்குடம் எடுக்க வந்த பெண்கள், மற்றவர்களும் கூட ரத்தம் சொட்ட சொட்ட சிதறி ஓடினர். இச்செய்தியை சண்முகநாதன் வாக்கி டாக்கி மூலம் குருபூஜைக்கு வந்தவர்கள் காவலர்களை தாக்குகிறார்கள். பேருந்துகளை அடித்து நொறுக்கிறார்கள் என்று பொய்யாக தகவல் சொன்னதால் ஜீப்பின் கதவு திறந்த நிலையில் வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியால் சுட்டார். ஜெயப்பிரகாஷ் என்ற 19 வயது இளைஞர் தொடைப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் குண்டடிப்பட்டு கீழே விழுந்தார். அவரைத் தூக்க முயற்சித்த பாலசுப்பிரமணி என்ற இளைஞர் விலாவில் குண்டடி பட்டார். மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். ஏற்கனவே பாட்டம் கிராமத்தில் உள்ள பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது சேர்வை இனத்தவர்களுக்கு பகை உள்ளது.இதில் சேர்வை சமுகத்திற்கு ஆதரவாக பல வழக்குகளில் எஸ்.ஐ.. சண்முகநாதன செயல்பட்டுள்ளார்.“
“ஆய்வாளர் கஜேந்திரன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் வேலை பார்த்த போது வெங்கடேச பண்ணையாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வெங்கடேச பண்ணையாருக்கும் பள்ளர் சமூகத் தலைவர் பசுபதி பாண்டியனுக்கும் பிரச்சினை இருந்தது. இதனால் பள்ளர் சமூகத்தின் மீது எப்போது விரோத மனப்பான்மையில் செயல்படுபவர். ஜீப்பை விட்டு இறங்கி துப்பாக்கியால் சுட்டதும் நல்ல நிலையில் வேறு ஒரு வாகனத்தில் ஏறிச் சென்று தனக்கு காயம்பட்டதாக நாடகம் ஆடி மருத்துவ மனையில் படுத்துக் கொண்டார். மேலும் காளியம்மாள் என்ற பெண் காவலரிடம் புகார் வாங்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு போட்டுள்ளார். காளியம்மாள் பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். சிந்தாமணியில் உள்ளவர்கள் பலர் அவருக்கு உறவுக்காராகள். சம்பவத்தன்று குருபூசைக்கு வந்தவர்களோடு பேசியதுடன் அனைவருடனும் சேர்ந்து கரும்புச்சாறு வாங்கி குடித்தார். தடியடி ஆரம்பித்தவுடன் மற்ற பெண் காவலருடன் சென்றுவிட்டார். ஆனால் உண்மைக்கு மாறாக காளியம்மாளை யூனிபார்முடன் இழுத்து மார்பகங்களை பிடித்து அமுக்கி மானபங்கம் செய்ததுடன் அவரை கீழே தள்ளிவிட்டு உயிர் தலத்தில் காலால் மிதித்தனர் என்று வக்கிரமாக சாதி வெறியுடன் புகார் பதிவு செய்துள்ளனர். அங்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் உள்ள பெயர்கள் அனைத்தையும் புகாரிலேயே எழுதி பதிவு செய்துள்ளனர். முதல் நாள் இரவே எஸ்.ஐ. சண்முகநாதன் அவனியாபுரத்தில் அனுமதி பெற்று வைத்த ரேடியோவை நிறுத்துமாறும் கூட்டமாக இருப்பதை தடுத்தும் இடையூறு செய்தார். இச்சம்பவத்திற்கும் ஜான்பாண்டியன் கைது செய்ததற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மப்டி போலீசார் தான் பேருந்து மீது கல்வீச்சு நடத்தி கண்ணாடியை உடைத்தனர்.“
இராமநாதபுரம் மாவட்டம், மண்டல மாணிக்கம் பள்ளப்பச்சேரி கிராமத்தில் 09.09.2011 அன்று பழனிக்குமார் என்ற +1 மாணவன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சம்பவம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 12.09.2011 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் பரமக்குடியில் 11.09.2011 அன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு அளித்த பதில் உரையில் “மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்று கூறினார்”.
மேற்படி சம்பவம் தொடர்பாக அந்த ஊரில் உள்ளவர்களிடம் விசாரித்த போது. பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் சொன்னது
“மண்டல மாணிக்கத்தில் ஆரம்பத்தில் நாடார், செட்டியார், முதலியார், பண்டாரம், அருந்ததியர் ஆகியோர் வீடு வாசல் நிலங்களோடு வாழ்ந்து வந்தனர். சுற்றியுள்ள ஏழு கிராமங்களிலும் மறவர் சாதியினர் பெரும்பான்மையாக வாழ்ந்ததால் மண்டல மாணிக்கத்தில் குடியேறி பல்வேறு வகைகளில் மற்றவர்களுடைய சொத்துக்களை அபகரித்து பெரும்பான்மையாக மாறிவிட்டனா. இக்கிராமத்தோடு இணைந்தது தான் பள்ளப்பச்சேரி கிராமம். 2004-ம் ஆண்டு மில்லுக்கு வேலை செய்யச் சென்ற பள்ளர் சமூகத்து பெண்களை மறவர்கள் தாக்கினர். பிறகு நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் போலீசாரே எங்களை அழைத்துச் சென்று மண்டல மாணிக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போதே மறவர் சாதியினர் எங்களை கடுமையாக தாக்கி மண்டையை உடைத்தனர். போலீசையும் தாக்கினர். இதற்கு போலீசே மறவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.”
“பள்ள்பச்சேரி கிராம மக்கள் வெளியில் செல்ல வேண்டுமென்றால் மறவர்கள் இருக்கும் மண்டல மாணிக்கம் பக்கம் சென்று தான் பேருந்தில் செல்ல முடியும். எங்கள் இளைஞர்கள், பெண்கள் சென்றால் கிண்டல் செய்வார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்து பேச முடியாது, வெளியிலும் சொல்ல முடியாது. அரசு விடுதியில் பள்ளர் சாதி மாணவர்களை துன்புறுத்துவார்கள். இதனால் 40 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆனைக்குளம் பள்ளியில் சேர்த்துவிட்டோம். காவல்நிலையத்தில் கூட பெரும்பான்மை போலீசார் இப்பகுதி மறவர் சாதியினரே இதனால் எங்களுக்கு எந்த காலத்திலும் நீதி கிடைக்கவில்லை.”
“ஜனவரி 2011-ல் சிறையில் இருந்து வந்த ஜான்பாண்டியன் எங்கள் கிராமத்திற்கு வரும் பொழுது மாடியில் இருந்து மறவர் சமூகத்தினர் கல்லெறிந்து வாகனங்களை தாக்கியதுடன் இருவரை கத்தியால் குத்தினர். மேலும் எங்கள் பள்ளப்பச்சேரி ரிசர்வ் ஊராட்சி தொகுதியாகும் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்தினோம். ஆனால் மறவர் சாதியினர் அங்கு வாழக்கூடிய குமரன் என்ற அருந்ததியினரை மிரட்டி வேட்பு மனு தாக்கல் செய்து பஞ்சாயத்து தலைவராக ஜெயிக்க வைத்தனர். பஞ்சாயத்து தலைவர் தரையிலே உட்கார்ந்திருப்பார், மறவர்சாதி துணைத் தலைவர் நாற்காலியிலே அவரதுமகன் உட்கார்ந்திருப்பார். டீ வாங்கி வருவது போன்ற எடுபிடி வேலைகளை தலைவர் தான் செய்வார் வாடா, போடா என்று தான் கூப்பிடுவார். மற்றொரு பாப்பாபட்டி, கீரிப்பட்டி இது மண்டல மாணிக்கத்தில் இரட்டை டம்ளர் இன்றும் உள்ளது”.
“இப்படி நாள்தோறும் அஞ்சி வாழ்கின்ற சூழலில் 09.09.2011 அன்று முத்துராமலிங்கபுரத்தில் நடந்த கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க எங்கள் ஊரில் இருந்து பலர் சென்றனர். பபூன் காமெடி முடிந்ததுடன் பல இளைஞர்கள் ஆற்றுப் பாலத்தை கடந்து திரும்பி ஊருக்கு ஐந்து பேர், நான்கு பேர் என்று வந்து கொண்டிருந்தனர். பின்பு இரு சிறுவர்கள் சற்று தூரமாக வந்த போது வேலியில் மறைந்திருந்த 10 பேர் மண்டல மாணிக்கம் மறவர்கள் பழனிக்குமார் என்ற 16 வயது சிறுவனை தலையில் வெட்டிக் கொன்றனர். கொலைக்கு முதல் நாள் மறவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் தேவர் வாழ்க என்பதற்கு கீழே யாரோ ஒன்பது என்று எழுதிவிட்டார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தனர். போலீசார் எங்களை விசாரித்தனர். அந்த கட்டிடப் பகுதியில் மறவர் சாதி மாணவர்களும், இளைஞர்களும் கிரிக்கெட் விளையாடுவார்கள் நாங்கள் அங்கு செல்லவே முடியாது இரவிலும் அவர்களே அங்கு மது அருந்துவர். நாங்கள் யாரும் எழுதவில்லை என்று போலீசாரிடம் சொன்னோம். அன்று இரவு தான் பழனிக்குமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டான். அச்சிறுவன் பார்ப்பதற்கு 10 வயது போல தோற்றம் தான் இருக்கும் இமானுவேல் சேகர் குருபூஜையை தடுக்கும் நோக்கத்தில் தான் கொலை நடந்துள்ளது.“
பள்ளபச்சேரி தங்கராஜ் கூறும் பொழுது “அன்று இரவு நான் குண்டாற்றை தாண்டி வரும் பொழுது கத்தும் குரல் கேட்டது. அப்போது ‘’கதையை முடிச்சாச்சு இமானுவேல் சேகரன் விழா எப்படி நடக்குது பார்ப்போம்’’ என்று சொல்லிக் கொண்டே கருவேல மரங்களில் சென்று மறைந்தனா. பழனிக்குமார் தலையில் வெட்டுபட்டு கீழே கிடந்தான்”.
கொலையுண்ட பழனிக்குமாரரின் பெற்றோர்கள் தங்கவேல், புவனேஸ்வரி, கூறும் போது “எனக்கு நான்கு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை எனது இரண்டாவது மகன் பழனிக்குமார் என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. நன்றாக படிப்பான் பள்ளிக்கூடத்தில் 301 மார்க் எடுத்திருக்கிறான். இவன் படிப்பை அடையாளமாக வைத்து தான் ஆனைகுளம் அரசு பள்ளியில் எங்கள் ஊர் மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். மற்ற மூன்று பிள்ளைகளும் சிறுவர்கள் படிக்கிறார்கள். காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் பொழுது சார்பு ஆய்வாளர் வழிவிட்டான் எழுதினார். கொலை செய்தவர்களுடைய பெயரை நாங்கள் சொல்லியும் எழுதாமல் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தொpயாத பத்து மர்ம நபர்கள் என்று எழுதிக் கொண்டார். மறவர் சாதி என்பதால் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறார். நாங்கள் சொன்னதில் நான்கு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்”.
பள்ளபச்சேரி இருளப்பன் கூறும் பொழுது “எங்கள் ஊருக்கு தனி ரோடு கேட்டு பல வருடங்களாக மனுக் கொடுத்திருக்கிறோம். அரசு அதிகாரிகள் செயல்படுத்த மறுக்கிறார்கள். இதனால் மறவர்கள் இடத்திற்கு நாங்கள் செல்லுகின்ற கட்டாயம் இருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது. நாங்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரில் சமுதாய ரீதியாகவே ஜான்பாண்டியன் வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினரை போலீசார் மிரட்டி திருப்பி அனுப்பிவிட்டனர். பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் அ.தி.மு.க.வில் உள்ள மறவர்கள் நாங்கள் நினைத்ததை முடித்துக் கொடுத்த தாயே என ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்”.
அரசு அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணை
பரமக்குடி துப்பாக்கி சூடுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழக முதல்வா் ஜெயலலிதா அவா்கள் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.காவல் துறையினா் தாங்களே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் மூலம் சம்மபவத்தை குறிப்பிட்டுள்ளனா்.
பரமக்குடி தாசில்தார் சிவக்குமார் மாவட்ட ஆட்சியா் அனுமதியின்றி சம்பவத்தில் எதுவும் சொல்ல முடியாது என்று கூறி முடித்துக்கொண்டார்.பரமக்குடி ஆய்வாளா் சிவக்குமார் தனது புகாரில் தாசில்தாரிடம் எழுத்துபூர்வமாக உத்திரவு பெற்று துப்பாக்கி சூடு நடத்தினோம் என்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் கலெக்டரிடம் பேசிவிட்டு உங்களை போனில் தொடர்பு கொள்கிறேன் என்றுசொன்னார். ஆனால் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.
பரமக்குடி காவல் ஆய்வாளார் சிவக்குமாரை சந்திக்க முயன்ற போது அவர் வெளிப் பணிக்கு சென்று விட்டதாக சொன்னார்கள். அதன்பின் அவருடைய செல் எண் 8056697999 –ல் தொடர்பு கொண்ட போது வேறு ஒருவர் எடுத்து மீட்டிங்கில் இருப்பதாகவும் நான் தகவல் சொல்லி விடுகிறேன்.உங்களோடு பேசுவார் என்றார்.ஆய்வாளர் சிவக்குமார் தொடர்பு கொள்ளவில்லை.
பரமக்குடி டி.எஸ்.பி.கணேசன் அவர்களை சந்திக்க முயன்ற போது அவர் மாமல்லபுரத்திற்கு மாறுதல் ஆகிவிட்டதாக பரமக்குடி போலீசார் தொரிவித்தனர்.
இளையான்குடி தாசில்தார் மணி அவர்களிடம் விசாரித்தபோது, “இளையான் குடி புறவழிச்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என போலீசார் கூறுகிறார்கள்.ஆனால் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை கொடுத்துள்ளார்.சம்பவத்தில் ஆனந்த் என்ற மாணவன் காயம்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதன் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளேன்.”
நிழற்படங்கள்
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
_________________________________________________________________________________________
மேற்படி சாட்சிகளின் விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உண்மை அறியும் குழு கண்டறிந்தவற்றை முடிவுகளாக தருகிறோம்.
1. தேவர் குருபூஜைக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இமானுவேல சேகரன் குருபூஜை விழா நடத்தக்கூடாது, இமானுவேல் சேகரன் குருபூஜை விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு ஆப்பநாடு மறவர் சங்கம், சசிகலா நடராஜன் உள்ளிட்டோர் சேர்ந்து ஜெயலலிதா அரசின் ஆதரவுடன் தேவர் சாதியினரை திருப்திபடுத்த சாதி வெறி கொண்ட போலீசை ஏவிவிட்டு பரமக்குடியில் ஆறு தலித் மக்களை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளது. இவ்வாண்டு இமானுவேல் சேகரன் குருபூசையை தடுத்து நிறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
2. செப்டம்பா 11 அன்று பரமக்குடியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து சட்டப் பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா மண்டல மாணிக்கத்தில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவரை கொச்சைப் படுத்தும்விதமாக சுவரில் எழுதப்பட்டிருந்தது. இதுவே பரமக்குடி சம்பவத்திற்கு மூலக்காரணம் என கூறிப்பிட்டார். ஆனால் நாங்கள் நேரடியாக சென்று விசாரித்ததின் அடிப்படையில் பள்ளப்பச்சேரி கிராம பள்ளர் சாதி மக்கள் பல ஆண்டுகளாக அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். மறவர்களை எதிர்த்து அப்பகுதியில் வாழ முடியாது என்ற நிலையில் பள்ளர் சாதி மக்கள் செல்ல முடியாத இடத்தில் அதிலும் கொல்லப்பட்ட பள்ளி சிறுவன் பழனிகுமார் கூட்டுறவு சங்க சுவரில் எழுதும் உயரம் கூட இல்லாத நிலையில். மறவர் சாதியினரே தேவர் வாழ்க என்பதற்கு கீழே ஒன்பது என எழுதிவிட்டு பொய்யாக போலீசில் புகார் கொடுத்து இரவில் கொலையும் செய்துள்ளனர்.
3. மண்டல மாணிக்கம் பள்ளபச்சேரி பழனிக்குமாரை கொடூரமாக கொலை செய்தது, குருபூஜை தினத்தன்று ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது, குருபூஜை விழாவிற்கு சென்னை மாநகர அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் கொண்டு வரப்பட்டது, கற்கள், கைத்துப்பாக்கிகள், உருட்டுக் கட்டைகள் இவை எல்லாம் முன் கூட்டியே தயாரித்து சம்பவ இடத்தில் கொண்டு வரப்பட்டது, ஆரம்பத்தில் 50 பேராக பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை எளிதாக அப்புறப்படுத்தும் நிலையில் இருந்த காவல்துறை அப்புறப்படுத்தாமல் இருந்தது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு பரமக்குடி நகரைத் தாண்டி சென்றவுடன் ஜான் பாண்டியனை கைது செய்தது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஜான்பாண்டியன் கட்சியைச் சேர்ந்தோர் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கூப்பிட்டு அதில் பேச்சுவார்த்தைக்காக எழுந்த ஒருவரை தள்ளிவிட்டு திடீரென தடியடியைத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுட்டது, இவற்றை எல்லாம் நியாயப்படுத்தி சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியது, இன்றுவரை அ.தி.மு.க. அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களை யாரும் சந்திக்காதது, 144 தடை உத்தரவு நீக்கப்படாமல் இருப்பது, பொய் வழக்குகள் 2000 பேர் மீது போட்டிருப்பது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது, ஆகியவை பரமக்குடி சம்பவம் திட்டமிட்டு அரசாங்க ஆதரவுடன் போலீஸ் தாழ்த்தபட்ட மக்கள் மீது நடத்திய படுகொலை என்பதை உறுதி செய்கிறது.
4. பரமக்குடி பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு அரசு எஸ்ஸி./எஸ்.டி போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட குருபூஜை பேனரில் தெய்வத்திருமகன் இமானுவேல் சேகரன் என்று குறிப்பிட்டுள்ளதை தேவர் சாதியைச் சேர்ந்தோர், காவல்நிலையத்திலும் புகார் மனு அளிக்கிறார்கள். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலம் நீக்கக் கோருகிறார்கள். போக்குவரத்து அதிகாரிமுன்பு நடந்த பேச்சுவார்த்தையின் போது பேனரை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் விழா நடக்காது என்று மேல் இடத்தில் உள்ளவர்கள் சொன்னதாக சில அதிகாரிகள் குறிப்பிட்டது. குருபூஜைக்கு இருதினங்களுக்கு முன்பு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூசப்பட்டிருந்த கான்கிரீட்டில் தேவர் பேரவை என்று எழுதப்பட்டு அதில் மலம் கழித்து வைக்கப்படுகிறது. ஆகிய சம்பவங்கள் குருபூஜை விழாவின் போது பிரச்சனையை உருவாக்குவது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதை நிரூபிக்கிறது.
5. தமிழகத்தில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக யாரேனும் போராட்டம் செய்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு முன் உதாரணமாக இச்சம்பவம் ஜெயலலிதா அரசு மற்றும் காவல்துறையால் நிகழ்த்தி காட்டப்பட்டுள்ளது. இனிவரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதா ஆட்சி எப்படி நடக்கும் என்பதற்கு சாட்சியாக இச்சம்பவம் விளங்குகிறது. பரமக்குடி சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதுடன் ஒட்டுமொத்த மக்களுக்கும் அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை.. தமிழகத்தில் போலீஸ் ஆட்சி துவங்கிவிட்டது என்பதை இச்சம்பவம் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அரசு பயங்கரவாதமே.
6. பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தவிர்ப்பதற்கான வாய்ப்பிருந்து அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வரவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு முன்பான சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. ஆனால் கடைபிடித்தது போல் பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் குறிப்பிட்டிருப்பது பொய்யானது. அதே போல் இளையான்குடியிலும், மதுரையிலும் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு ஆதரவும் காவல்துறையில் உள்ள ஆதிக்க சாதிவெறியும் காரணமாக அமைந்துள்ளது.
7. ஜான்பாண்டியனை கைது செய்யாமல் இமானுவேல் சேகரன் குருபூசைக்கு செல்ல அனுமதித்திருந்தால் துப்பாக்கிச்சூடு படுகொலை நடந்திருக்காது.
8. அரசியல் சட்டத்தில் மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மனித உரிமைகளை மறுத்து காட்டுமிராண்டித்தனமாக தடியடி துப்பாக்கிசூடு நடத்தி படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள்.
பரிந்துரைகள்:
_________________________1. பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் கொலை சம்பவத்திற்கு காரணமான டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி மற்றும் இதர போலீசார் மீது தமிழக அரசு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து விசாரணை நடைபெறும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
2. இராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்து, கிராமங்களில் போலீஸ் ரெய்டு செய்வதை கைவிட வேண்டும். செப்டம்பா 11 அன்று 2000 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும். யாரையும் கைது செய்யக்கூடாது.
3. சம்பவத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் இழப்பீடும், காயம்பட்டவர்களுக்கு ஐந்து இலட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் அவர்களது வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
4. மண்டல மாணிக்கம் சிறுவன் பழனிக்குமார் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். பள்ளவச்சேரி பகுதி நிலமையை நேர்மையான மாவட்ட ஆட்சியர் மூலம் ஆய்வு செய்து தலித் மக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலித் மக்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறையை இனக்கலவரம் என்பதாக தவறாக சித்தரிப்பதுடன் அதற்கு ஆதரவாக போலீசாரின் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி செயல் பட்டு வருகிறார்.இதனால் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் அரசாங்கத்தின் பங்கு குறித்து விசாரிக்க பணியில் உள்ள நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
1 comment:
Nammalai ethirthathal thaney Bangalore jail la Pottanka. Enimel thirunthidun.
Post a Comment