Wednesday, July 11, 2012

தமிழக காவல்துறை இணையத்தில் 'அனானிமஸ்' தாக்குதல்

தமிழக காவல்துறை இணையத்தில் 'அனானிமஸ்' தாக்குதலா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 ஜூலை, 2012 - 14:32 ஜிஎம்டி

அனானிமஸ் என்கிற பெயரில் இணையத்தில் செயற்படும் கருத்துச் சுதந்திரத்திற்கான ஒரு குழுமம், தமிழக அரசின் காவல்துறை இணையதளத்திற்குள் புகுந்து காவல்துறை தகவல்களைக் கைப்பற்றி அவற்றை இணையத்தில் வெளியிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறையின் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தவித மறுப்போ அல்லது விளக்கமோ வெளியிடப்படவில்லை. ஆனால் இப்படியான தாக்குதலை தாங்கள் நடத்தியதாக அனானிமஸ் அமைப்பின் சார்பில் உறுதிசெய்யப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் செயற்படும், நிலையான முகமும் முகவரியுமற்ற அனானிமஸ் அமைப்பு, சமீபகாலமாக இந்தியாவிலும் தனது பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்திய நடுவணரரசு தற்போது முன்னெடுத்துவரும் இணையதள செயற்பாடுகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து எதிர்த்துவரும் அனானிமஸ் அமைப்பின் உறுப்பினர்கள், இந்திய பெருநகரங்களில் சமீப வாரங்களில் போராட்டங்களை நடத்தினார்கள்.
அந்தபின்னணியில், தமிழக காவல்துறையின் இணையதளத்தை இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தாக்கி, காவல்துறையின் ரகசியங்களை கைப்பற்றி அவற்றை இணையத்தில் வெளியிட்டிருப்பது, தமிழக அரசின் இணையதள பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த பலவித கேள்விகளை எழுப்புவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
இந்திய நடுவணரசு மற்றும் தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் படிப்படியாக தங்களின் பணிகளை பெருமளவில் இணையம் சார்ந்ததாக வேகமாக மாற்றிவரும் பின்னணியில், தங்களின் இணையதள கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்து இந்த அரசுகள் உரிய கவனம் செலுத்துவதே இல்லை என்கிறார் அனானிமஸ் அமைப்பை கூர்ந்து கவனித்துவரும் தகவல்தொழில்நுட்பவியலாளர் யோகேஷ்.
அனானிமஸ் என்கிற அமைப்பு குறித்தும், அதன் செயற்பாடுகள் குறித்தும் யோகேஷ் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
http://www.bbc.co.uk/tamil/science/2012/07/120711_scienceanonymousjuly102012.shtml

 http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/07/120711_anonymous.shtml

No comments: