கட்சி குற்றச்சாட்டு
சென்னை பல்கலைக்கழகம், மதுரை அண்ணா பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள்
நியமிப்பதில் தாழ்த்தப்பட்டவர் புறக்கணிக்கப்படுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி
குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை பல்கலைக்கழகத்தில் 89 பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள்
பணியிடங்களுக்கும், மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் 27 அலுவலக
பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்திய அரசினுடைய வழிகாட்டுதலின்படி சுழற்சி முறையில் சென்னை
பல்கலைக்கழகத்தின் சார்பாக கோரப்பட்டுள்ள 89 பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு 20 பணியிடங்களும், மதுரை அண்ணா பல்கலைகழகத்தில் 27 அலுவலக
பணியிடங்களில் 7 இடங்களும் ஒதுக்கப்பட வேண்டும்.
உள் இடஒதுக்கீடு தவறானதாகவும், சட்ட விரோதமானதாகவும் இருக்கிறது என்பது
ஒருபுறம் இருக்க 3 சதவீத அடிப்படையில் சென்னை பல்கலைக்கழகம் 20
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடங்களில் 3 இடம் மட்டுமே உள் இடஒதுக்கீடாக
ஒதுக்க முடியும்.
ஆனால் 20 இடங்களையும் ஒரு பிரிவினருக்கே ஒதுக்கி சென்னை பல்கலைக்கழகம்
எந்தவிதமான நியாமும் இல்லாமல் விண்ணப்பம் கோரியுள்ளது.
இதேபோல மதுரை அண்ணா பல்கலைக்கழகமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான
ஒட்டுமொத்த 7 இடங்களையும் ஒரு பிரிவினருக்கே ஒட்டு மொத்தமாக
ஒதுக்கியுள்ளது.
சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இச்செயல்கள் மிகமிகத் தவறானது.
கண்டிக்கத்தக்கது. இது 2 கோடிக்கும் மேலான தாழ்த்தப்பட்ட மக்களுடைய
வாழ்க்கையோடு விளையாடக்கூடிய செயல் ஆகும்.
எனவே சென்னை பல்கலைக் கழகம், மதுரை அண்ணா பல்கலைக் கழகங்கள் தாங்கள் இந்த
வேலைவாய்ப்பு சம்பந்தமாக கொடுத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான
விளம்பரங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் சென்னை
பல்கலைக்கழகம் மற்றும் மதுரை அண்ணா பல்கலைக் கழகங்களை இழுத்து மூடும்
போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
http://www.devendrakural.tk/
No comments:
Post a Comment