Wednesday, November 10, 2010

மோதிக்கொள்ளும் டாக்டர்கள்!

மோதிக்கொள்ளும் டாக்டர்கள்!

'வடக்கே வன்னிய இனம்... தெற்கே தேவேந்திர குலம்... இதுதான் எதிர்வரும்

தேர்தலுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கையில் எடுக்கப்போகும் அஸ்திரம்!' என்று குரல் கேட்டு வரும் இந்த நேரத்தில்... தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் தென் மாவட்டங்களில் சூறாவளிச் சுற்றுப்பயணம் நடத்தி முடித்திருக்கிறார் ராமதாஸ். தங்களது கோட்டைக்குள் கால் பதிக்க நினைக்கும் ராமதாஸின் அதிரடித் திட்டம், புதிய தமிழகம் கட்சியினரிடம் கலக்கத்தையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது! இது காவல் துறையை உஷாராக கவனிக்கவும் வைத்திருக்கிறது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஒட்டுமொத்த வாக்கு வங்கியையும் கவரும் திட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நெல்லையில் தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இம்மானுவேல் சேகரனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது இதில் ஹைலைட்.
அந்தப் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராமதாஸை வரவேற்கும் வகையில், வழி எங்கும் பா.ம.க. கொடியுடன், சிவப்பு - பச்சைக் கொடிகளையும் கட்டியிருந்தனர், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர். இது புதிய தமிழகம் கட்சிக் கொடியின் சாயலைக் கொண்டிருப்பதாக டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பு புகார் சொல்கிறது. புதிய தமிழகத்தின் நெல்லை மாநகர தலைவர் செல்லப்பா, 'எங்கள் கட்சி சாயல் உள்ள கொடிகளை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால், நாங்களே அந்த வேலையை செய்வோம்...' என்று காட்டம் காட்டியதால், பரபரத்தது போலீஸ். இதற்கிடையே, பா.ம.க. நிர்வாகிகள் தங்கி இருந்த ஹோட்டலின் முன்பாகக் கட்டப்பட்டு இருந்த கொடிகளை புதிய தமிழகம் கட்சியினரே அகற்றியதால், இரு கட்சியினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. அதனால், போலீஸாரே சிவப்பு - பச்சை கொடிகளை வழி நெடு கிலும் அப்புறப்படுத்தினர். இதில் கொதிப்படைந்த பா.ம.க-வினர், திடீரென சாலை மறியலில் இறங்கிப் பதற்றம் கூட்டி னார்கள்.
பா.ம.க-வின் மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு, ''பா.ம.க ஆரம்பமாவதற்கு முன்பு வன்னிய சங்கமாக இருந்த காலத்திலேயே இம்மானுவேல் சேகரன் நினைவு இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியவர் அய்யா. அந்த சமயத்திலேயே மணிமண்டபம் அமைக்கணும்னு அரசுக்கு கோரிக்கை வெச்சார். பா.ம.க. தொடங்கப்பட்டதும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர், மாநிலப் பொருளாளர் போன்ற பொறுப்புகளில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோரை நியமித்து அழகு பார்த்தார். இப்போதுகூட, நான் மட்டுமல்லாமல்... வடிவேல் ராவணன், மோகன்ராஜ் எட்வின் நம்புடையார், ராசு தேவேந்திரன் எனப் பலருக்கும் மாநிலப் பொறுப்பு கொடுத்திருக்கார். தேவேந்திர குல சமுதாயத்தின் சொத்தாக இருந்த கொடியை ஒரு சிலர் சுயநலத்துடன் தங்கள் கட்சிக் கொடியாக்கிக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை. அது தொடர்பாக வழக்குகூட நிலுவையில் இருக்கு. அய்யா மீது இந்த சமுதாய மக்கள் மிகுந்த நம்பிக்கை வெச்சிருக்காங்க. அந்த வயிற்றெரிச்சலில் ஒரு சிலர் குழப்பம் ஏற்படுத்துறாங்க...'' என்றார் காட்டமாக.

No comments: