ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”
மே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து வந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!
அசுர பலத்தில் வந்திருக்கும் அ.தி.மு.க ஆட்சி எப்படியிருக்கும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே ஜெயாவின் இரண்டு இருண்ட காலத்தை தமிழகம் பார்த்திருக்கிறது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தனது தொண்டர்கள் வீட்டின் முன்பு, தெருவில் மக்களோடு மக்களாக கலந்து வெற்றியை பகிர்ந்து கொள்கிறார். ஜெயலலிதாவோ தூங்கிக் களைத்த முகத்தோடு பால்கனியில் மேலிருந்தவாறு கீழே குதிக்கும் தொண்டர்களை பார்த்து இரண்டு விநாடி, இரட்டை விரல்களைக் காட்டிவிட்டு சென்று விடுகிறார். அதன்படி வரும் ஆட்சி இப்படித்தான் இருக்குமென்பதற்கு இந்த படிமமே ஒரு நல்ல விளக்கம்.
கருணாநிதி குடும்பத்தின் ஏகபோக தொழில்களை ஓரளவுக்கு கப்பம் வாங்கி அனுமதித்துவிட்டு ஜெயா சசி கும்பலின் ஏகபோகம் ஆரம்பிக்கும். மறுகாலனியாக்கத்தின் கொள்ளையில் பொறுக்கி தின்பதற்கு தற்போது வாய்ப்பு அதிகமென்பதால் இவர்கள் சட்டபூர்வமாகவும், சட்ட விரோதமாகவம் வெகுவேகமாக கல்லா கட்டுவார்கள். ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலில்லாத வறட்சியை ஐந்து மாதங்களில் கூட தீர்த்துக் கொள்வார்கள்.
மீண்டும் போலீசின் நேரடி அதிகார ஆட்சி வரும். ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம், ஈழ ஆதரவு முதலியவையெல்லாம் மிரட்டல் கண்காணிப்பில் வைக்கப்படும். இதற்கு மேல் ஜெயலலிதா, சசிகலா என்ன விரும்புகிறார்கள், எப்போது என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த திகில் நிறைந்த அடக்குமுறைகளுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
அரசு ஊழியர், தொழிலாளர்கள், மாணவர்கள் அனைவரும் தங்களது நலனுக்காக போராடுவது குதிரைக் கொம்பாக மாற்றப்படும். மீறி போராடினால் கடும் அடக்குமுறையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆண்டுகள் மாறினாலும் ஜெயலலிதா மாறமாட்டார். இதற்க்கு வைகோவே மிக பெரிய உதாரணம். இது போக துக்ளக் சோ போன்ற குருநாதர்கள் என்ன திட்டமெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பார்ப்பனியத்தின் வேலைத்திட்டங்களெல்லாம் மறைமுகமாகவோ,நேரடியாகவோ கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் பல உண்டு.
இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.
’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள் பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறது? ஒரு சொட்டு மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப் போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன் அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’ என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?
ஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும், தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை கேட்டுக் கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே?!
இப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா? மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited என்ற பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் SNJ DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும் பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா?
இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் அரங்கக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமுல்படுத்தியிருந்தார் கருணாநிதி. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கரையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்துவிட்டார். இப்போது வரை அடித்த போலீஸுக்கு சிறு தண்டனையும் கிடைக்கவில்லை. தலித்களின் சம்பந்தியாக தன்னை அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும் செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா?
சந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா… போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.
ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர் இருக்கா?’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா? இப்போதும் கூட பலர் ‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு. பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர். ’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?
’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும் இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.
போலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’ என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள் மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு என்னப் பிரச்னை?’ என்பது பர்க்கா தத்தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.
நாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால் இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும் இல்லை.
நமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும் சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார்.
போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும் அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா, அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!
- பாரதி தம்பி
1 comment:
This is 110% correct. We should blame us only. We the people give clean sweep to each of these 2 parties to clean sweep us. We need to give a tough time by having a hung assembly. When there is a hung assembly, then these parties will have some fear.
Atleast DMK will do some development work even if they loot.The roads in TN are much better. Jayalalitha will only loot. So far Jayalalitha doesnt have even one road or flyover to her credit.Both of them are against our community.Both of them have promised freebies which is out of tax payers money. So I voted for 49(o) this time. We need to wait and watch Jaya this time. Will there be development????
Post a Comment