Sunday, December 25, 2011

’ரோமன் கான்கிரீட்’டில் கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை என்றும் இளமையாக திகழும்!

IMG_1587ரோமன் கான்கிரிட்’டில் கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை என்றும் இளமையாக திகழும் என்று மூத்த பொறியாளர் ராமநாதன் ஆதாரங்களுடன் விளக்கினார்.


மதுரையை சேர்ந்த மூத்த பொறியாளர் ராமநாதன் (வயது 77). நெடுஞ்சாலைத் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கட்டுமானப் பணிகளில் 55 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். முல்லைப் பெரியாறு அணை அருகேயுள்ள தேவாரம் இவருடைய சொந்த ஊர். முல்லைப் பெரியாறு அணை பற்றியும், பெரியாறு பற்றியும் அனைத்து விவரங்களையும் அறிந்தவர். அது பற்றிய பல்வேறு ஆவணங்களையும், புத்தகங்களையும் படித்து ஆய்வு பணிகள் மேற்கொண்டவர். முல்லைப் பெரியாறு அணை குறித்த பல்வேறு தகவல்களை புகைப்பட ஆதாரங்களுடன் நேற்று மாலை வெளியிட்டார். சென்னை சிவானந்தா சாலையில் உள்ள என்ஜீனியர்கள் அலுவலக அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திரண்டிருந்த நிருபர்களுக்கும், இது தொடர்பாக பேட்டியளித்தார்.


முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வீடியோ படத்தை வெளியிட்டு ராமநாதன் கூறியதாவது:-


முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே பிரமாண்டமான மாறாத உறுதி கொண்ட அணையை பென்னிகுயிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் கட்டினாலும், இதற்கான வித்தை விதைத்தவன் ஒரு தமிழன் தான். ராமநாதபுர சமஸ்தானத்தில் திவானாக பணியாற்றிய முத்து இருளப்ப பிள்ளை என்பவருடைய சிந்தனையில் 1789-ம் ஆண்டு இங்கு அணை கட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.


அப்போது இருந்த ஆங்கிலேயர்களுக்கு இதை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், பல்வேறு காரணங்களால் இது தடைப்பட்டு வந்தது. இறுதியாக பென்னிகுயிக் இப்பணியை நிறைவேற்றினார்.


என்றும் இளமையானது


mullaiஇந்த அணையின் தொடக்கப் பணி 1887-ம் ஆண்டு முதல் நடைப்பெற்றது. முதலாண்டில் தொழிலாளர்களுக்கான தங்கும் இடங்கள் மற்றும் ஆயத்த பணிகள் நடைபெற்றன. 9 ஆண்டுகள் பணி தொடர்ந்து நடைபெற்று 1896-ம் ஆண்டு முடிவுற்றது. ராயல் என்ஜீனியரான பென்னிகுயிக் இப்பணியை ஒரு சவாலாக எடுத்து மேற்கொண்டார்.


80 ஆயிரம் டன் மணலும், 45 ஆயிரம் டன் ஓடுகளும் அணை கட்டுமானப் பணி நடைபெற்ற மலைப் பகுதிக்கு மாட்டு வண்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன. அணைக் கட்டுமானப் பணிக்கு செங்கல்கள் பயன் படுத்தப்படவில்லை. முழுக்க, முழுக்க ரோமன் சிமெண்டினால் கட்டப்பட்டது.


நீர்த்த சுண்ணாம்பு, கருங்கல் ஜெல்லி, மணல், எரிமலை சாம்பல் ஆகியவற்றை கொண்ட கலவை தான், ரோமன் கான்கிரிட். இவற்றை கொண்டு கட்டினால் அது நித்திய இளமைக் கொண்டதாக திகழும்.உதாரணத்திற்கு, கி.பி. 130 ஆண்டின் ஸ்பெயின் நாட்டில் கட்டப்பட்ட கார்னல் போ என்ற அணை ரோமன் கான்கிரிட்டால் கட்டப்பட்டதாகும்.


இந்த அணை சுமார் 2,000 ஆண்டுகளாக இளமைக் குன்றாமல் கம்பீரமாக நிற்கிறது. இத்தனைக்கும் அந்த அணை அமைந்துள்ள பகுதி பலமுறை 5 முதல் 6 ரிக்டர் வரையிலான நிலஅதிர்வுக்கு ஆளானது. அப்படியிருந்தும் அந்த அணை அசைந்து கொடுக்கவில்லை.


அப்படியானால், முல்லைப் பெரியாறு அணை ரோமன் கான்கிரிட்டால் கட்டப்பட்டு சுமார் 120 ஆண்டுகள் தான் ஆகிறது. இதன் வலிமை பற்றி கூறவும் வேண்டுமா? இங்கு அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதாக கூறுகிறார்கள். இந்த மண்டலம் ரிக்டர் அளவுகோலில் 4-க்கும் குறைவாக அதிர்வு ஏற்படக் கூடியதாகும். எனவே, இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.


மேலும், ஓர் அணையில் நீர் கசிவு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு மனிதனின் உடம்பில் வியர்வை எவ்வளவு முக்கியமோ, அது போல அணைக்கு நீர் கசிவு இருக்க வேண்டியதும் அவசியமாகும். முல்லைப் பெரியாறு அணையில் எந்தளவு நீர்கசிவு இருக்க வேண்டுமோ, அது உள்ளது. இது இருக்க வேண்டிய அவசியத்தை பென்னிகுயிக்-கை குறிப்பிட்டுள்ளார்.


பெரியாறு - ஓர் ஆய்வு


முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பெரியாறு நதி சிவகிரி மலையில் இருந்து உற்பத்தியாகிறது. சிறிது தொலைவு ஓடிய பிறகு இந்தDec_08_Mullai-periyaru-dam ஆற்றில் சின்ன முல்லையாறும், பெரிய முல்லையாறும் தனி உப நதிகளாக ஓடி வந்து கலக்கின்றன. இதன் பிறகு தான் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு இருக்கிறது.


முல்லைப் பெரியாறு நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து அரபிக்கடலில் கலக்கும் இடம் வரை ஆற்றின் மொத்த நீளம் 244 கிலோ மீட்டராகும். இதில், 189 கிலோ மீட்டர் வரை மலைப் பிரதேசமாகும். இது வரை பாசன வசதிப் பெறும் நிலம் கிடையாது. அதன்பிறகு, 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு சிறிது பாசன வசதி நடைபெறுகிறது.


இறுதியாக 15 கிலோ மீட்டர் தொலைவு உள்ள ஆறு கடலில் கலக்கும் வரை மிகுந்த நச்சுத் தன்மை அடைகிறது. அப்பகுதியில் உள்ள 247 ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவு நீர் அந்த ஆற்றில் கலக்கிறது.


கேரளாவின் நோக்கம்


முல்லைப் பெரியாறு அணை ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டதன் மைய நோக்கம் தமிழகத்தில் உள்ள மதுரை, ராமநாதபுரம் உள்ளடங்கிய மாவட்ட மக்களின் விவசாயத் தேவையையும், குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கு தான், கேரளா இந்த ஆற்றின் மூலம் எவ்வித பாசன வசதியை பெற வேண்டிய சூழ்ல் இல்லை. அவர்களுடைய ஒரே குறி இந்த ஆற்றை பயன்படுத்தி கூடுதல் மின்சக்தி பெறவேண்டும் என்பது தான்.


இதற்காக தான் முல்லைப்பெரியாறு அணையை அகற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். 1970 வரை, இப்பகுதியில் நில அதிர்வு கிடையாது. அதன் பிறகு தான் கீழ் பகுதிகளில் இடுக்கி அணையும், சிறுதோணி, குலமேவு அணைகளும் கட்டப்பட்டன. சமீபகாலமாக நில அதிர்வுகள் ஏற்படுவதற்கு இந்த 3 அணைகளும் தான் காரணம். இந்த மூன்றிலும் உள்ள நீர்மட்டத்தின் அளவை குறைத்தாலே அப்பிராந்தியத்தில் நில அதிர்வு ஏற்படாது.


காப்பாற்ற வேண்டும்


7-12-2011-42-research-engineer-of-the-dam-nமாறாத இளமை கொண்ட உறுதியான, முல்லைப் பெரியாறு அணையை தமிழகம் காப்பாற்றியே தீர வேண்டும். கேரளா கூறுவது போல, முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை அங்கு கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராது. இதன் எதிர்விளைவு தமிழ்நாட்டில் மிக கடுமையாக இருக்கும். நம்முடைய லோயர் கேம்ப் பகுதியில் நீர்மின்சக்தி கிடையாது.


முல்லைப் பெரியாறு அணையில் இருந்து சுருளியாற்று வழியாக கணிசமான நீர் தற்போது வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. வைகை அணைக்கு பிரதானமான நீர் ஆதாரமே முல்லைப் பெரியாறு அணை தான். அந்த நீர் பறி போக விட்டு விடக் கூடாது. அப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டால், நினைத்து பார்க்க முடியாத மிக மோசமான நிலைமையை தமிழ்நாடு அடையும். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய பகுதிகள் பாலைவனமாகிவிடும்.


ரோமன் கான்கிரிட் மற்றும் சிமெண்டால் ஸ்பெயினில் கி.பி. 130-ல் கட்டப்பட்டுள்ள கார்னல் போ அணையை அந்த நாட்டு அரசு தேசிய சின்னமாக அறிவித்து பெருமைப் படுத்தியுள்ளது. அது போன்ற அந்தஸ்த்தை நம்முடைய முல்லைப் பெரியாறு அணைக்கும் நாம் கொடுத்து அதை பராமரித்து வர வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியில் பொறியாளர் சங்க நிர்வாகிகள் சத்திய மூர்த்தி, திருநாவுக்கரசு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மூத்த பொறியாளர் ராமநாதன், தன்னுடைய ஆரம்ப கல்வியை தேவாரத்தில் பயின்றார். போடியில் உயர் நிலைக் கல்வியையும், திருச்சி புனித சேவியர் கல்வியில் இன்டர் மீடியட் படிப்பையும் முடித்தார். காக்கிநாடாவில் பொறியியல் பட்டம் பெற்று அரசு பணியில் சேர்ந்தார்.


ஏராளமான சமூக நலப்பணிகளில் ஈடுபட்டுள்ள இவருடைய மனைவி பெயர் கமலா அம்மையார். மூத்த மகன் ஜெயராமன் சென்னை மருத்துவ கல்லூரியில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் காண்டீபன் பொறியாளராக உள்ளார். ஒரே மகள் தேவி, தேனியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


நன்றி : மாலை முரசு

No comments: