Monday, October 17, 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை

Dinakaran - report:


மதுரை, அக். 13:

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க சிபிஐ இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த மாதம் 11ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 6 பேர் பலியாயினர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் முருகன், பகுஜன் சமாஜ் நிர்வாகி குரு விஜயன் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி சம்பத் கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்கவும், துப்பாகி சூடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்க உத்தரவிடக்கோரி தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறை சங்க செயலாளர் செல்வக்குமார் தனியாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் தாமுவேல்ராஜ் புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘பரமக்குடி துப்பாக்கி சூடு, அதை தொடர்ந்து மதுரை சிந்தாமணியில் நடந்த மோதல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிக நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் ஜெயசந்திரன், பெரியகருப்பையா ஆகியோர் நேற்று விசாரித்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க சிபிஐ இயக்குனர், டிஜிபி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
துப்பாக்கிச்சூடு
சிபிஐ இயக்குனருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

No comments: