ஒரு 15 அல்லது 20 நாட்களுக்கு முன்னால், ஜெயலலிதா பெங்களுரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு சில நாட்களில், சசிகலாவின் கணவர் நடராஜன் ஒரு முக்கியமான கூட்டத்தை கூட்டியிள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். முக்குலத்தோர் சமூகத்தின் இணைப்பான கண்ணாயிரமும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அந்தக் கூட்டத்தை நடராஜன் கூட்டியதே பெங்களுரில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்து விட்டால் என்ன செய்வது என்பதற்காகத் தான். நடராஜன் சொன்ன ஆலோசனை பெங்களுரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை என்பது உறுதி. அப்படி தண்டனை கிடைத்து விட்டால் இந்த முறை மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக முடியாது. மற்றவர்களை முதலமைச்சராக்கிப் பார்த்து சலித்து போய் விட்டது. இந்த முறை நானே முதலமைச்சராவத என்று முடிவெடுத்து விட்டேன். ஜெயலலிதா நான் முதலமைச்சர் ஆவதை நிச்சயம் விரும்பமாட்டார். தனக்கு சாதகமாக உள்ள எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க நிச்சயம் முயற்சிப்பார். அவர் முயற்சிகளை முறியடிக்கவே இந்தக் கூட்டம். அப்படி ஒரு நெருக்கடி வரும் பட்சத்தில் இந்தக் கூட்டத்தில் உள்ள அத்தனை பேரும் நான் முதலமைச்சராவதற்கான அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும். அதற்கான உரிய பலன்கள் உங்களை வந்து சேரும் என்று கூறி விட்டு, கண்ணாயிரத்தைப் பார்த்து நீங்கள் உளவுத்துறையில் இருப்பதால் இப்போதே ஒவ்வொரு எம்எல்ஏவைப் பற்றியும், அவர் என்ன ஜாதி, அவருக்கு பின்புலம் என்ன, பணம் எவ்வளவு வைத்திருக்கிறார், பலம் என்ன, பலவீனம் என்ன என்ற விபரங்கள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை தயார் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு கண்ணாயிரம் விரிவான பதில் எதையும் சொல்லாமல், “என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன் (I will see what I can do)” என்று கூறியிருக்கிறார். இத்தோடு இந்தக் கூட்டம் முடிந்தது.
அண்ணன் நடராஜன் சொல்றத செய்றதுக்குத் தானே நான் இருக்கேன் ?
இதற்குப் பிறகு கண்ணாயிரம் மாற்றப் பட்ட அன்று காலை தற்போதைய உளவுத்துறை டிஜிபி ராமானுஜம் மற்றும் கண்ணாயிரம் ஆகிய இருவரையும் ஜெயலலிதா அழைத்திருக்கிறார். அழைத்து கண்ணாயிரத்துக்கு விழுந்ததே பாருங்கள் டோஸ். உங்க வீட்டு டோஸ் எங்க வீட்டு டோஸ் இல்லை. அப்படி ஒரு டோஸ். நீங்கள் என்னிடம் வேலை செய்கிறீர்களா, இல்லை மன்னார்குடி குடும்பத்திடம் வேலை செய்கிறீர்களா. மன்னார்குடி குடும்பத்துக்கு கொத்தடிமை ஆகி விட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். தலையைத் தொங்கப் போட்ட படி வெளியே வந்த கண்ணாயிரம், எதுவும் சொல்லாமல், “சிஎம் என்னை ரொம்ப மோசமாக திட்டிட்டாங்க” என்று மட்டும் புலம்பியிருக்கிறார். (இவுரு பண்ண காரியத்துக்கு திட்டாம கொஞ்சுவாங்களா) அன்று இரவே கண்ணாயிரத்துக்கு மாறுதல் ஆணை வழங்கப் பட்டு தொழில் நுட்பப் பிரிவுக்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் பட்டார்.
கண்ணாயிரத்தின் வரலாறே துரோகங்களால் நிறைந்தது. அதிமுக ஆட்சியில் உளவுத்துறையின் எஸ்பியாக நியமிக்கப் பட்டவர், 6 மாதத்தில் கையை காலை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் மாற்றப் பட்டார். பிறகு டிஐஜியாக ஆனதும் மீண்டும் உளவுத்துறைக்கு நியமிக்கப் பட்டு 6 மாதத்தில் வனவாசம் சென்றார்.
திமுக ஆட்சியில் கண்ணாயிரம் ஆடிய ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா ? இதைப் பற்றி சவுக்கு ஆகஸ்ட் 2010லேயே கமிஷனர் கண்ணாயிரம் என்ற கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறது.
இத்தனை ஆட்டங்களையும் போட்ட கண்ணாயிரத்துக்கு மீண்டும் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம் கொடுத்தது இந்த முதலமைச்சர் தானே ? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்க உங்களுக்கு எப்படி மனது வந்தது கண்ணாயிரம் அவர்களே ? ஜெயலலிதா நினைத்திருந்தால், உங்களை கன்னியாக்குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு செக்யூரிட்டி ஆபீசராக நியமித்திருக்க முடியுமா முடியாதா ?
முதல் நாள் சிறைத்துறை தலைவராக நியமனம். மறுநாளே உங்களை உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக நியமித்தாரே ஜெயலலிதா ? அந்த நியமனத்திற்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா ? செய்நன்றி கொன்றவருக்கு உய்வே இல்லை என்கிறாரே வள்ளுவர் அதை நீங்கள் படித்ததில்லையா ?
நீங்கள் உளவுத்துறை கூடுதல் டிஜிபியானதும், உங்கள் பிசினஸ் பார்ட்னர் ராதாகிருஷ்ண நாயுடுவுக்கும் நல்ல பதவி வாங்கித் தந்தீர்களே கண்ணாயிரம். அந்த உத்தரவிலும் கையெழுத்து போட்டது இதே முதலமைச்சர் தானே ? அவருக்கு நீங்கள் காட்டும் நன்றியா இது ?
நடராஜன் அழைத்த கூட்டத்தில் கலந்து கொண்ட நீங்கள், உளவுத்துறை கூடுதல் டிஜிபி என்ற முறையில் உளவு சேகரிப்பதற்காக கலந்து கொண்டேன் என்று சொல்லக் கூடும். அப்படி கலந்து கொண்டால் அதை அன்றைய இரவே அறிக்கையாக முதலமைச்சருக்கு அனுப்பியிருக்க வேண்டாமா ? அனுப்பாமல் அமைதியாக இருந்ததே நீங்கள் முதலமைச்சரை விட நடராஜனுக்கு விசுவாசமாக இருந்தீர்கள் என்பதைத் தானே காட்டுகிறது ?
இது தவிரவும், ஜாபர் சேட்டுக்கு 2ஜி ஊழலில் உள்ள தொடர்பையும், வோல்டாஸ் நிலம் ராசாத்தி அம்மாளுக்கு வழங்கப் பட்டது குறித்த தொடர்பையும் விசாரிக்க உத்தரவிட்டும், நீங்கள் ஜாபரை காப்பாற்றுவதற்காக விசாரிக்காமல் அமைதியாக இருந்தீர்கள் என்ற குற்றச் சாட்டையும் உங்கள் மீது சுமத்துகிறார்களே …உங்கள் பதில் என்ன கண்ணாயிரம் ? ஜெயலலிதா உங்களை உளவுத்துறைக்கு நியமித்த போதே அவர் தவறு செய்கிறார் என்பதை சவுக்கு காதாயிரம் ஆன கண்ணாயிரம் என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தது. உங்களைப் பற்றிய விரிவான தகவல்களையும் வெளியிட்டிருந்தது. அன்றே முதலமைச்சர் சுதாரித்திருக்க வேண்டும். கண்ணாயிரம் போன்ற அதிகாரிகளை உளவுத்துறையில் வைத்திருப்பது ஓட்டைப் பானையில் சமைப்பதைப் போன்றது. இவர்கள் தங்களைத் தவிர, வேறு யாருக்கும் விசுவாசமாக இருக்கவே மாட்டார்கள். டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்று வரும் விஷயங்களை இன்றும் ராதாகிருஷ்ணன், கண்ணாயிரத்துக்கு ஈமெயில் மூலமாக அனுப்பி வருவதாகவே டிஜிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்னது சஸ்பென்ஷன் ஆர்டரா ? எனக்குமா ?
தற்போது கண்ணாயிரம் இந்தியா, இலங்கை, மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கோபால் பல்பொடி அல்ல. சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார். அவர் நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் தெரிகிறது. மூன்று மாதங்களுக்கு அவர் திரும்பி வரமாட்டார் என்றும் தெரிகிறது.
மூன்று மாதங்களுக்குள், பெங்களுரு வழக்கில் தீர்ப்பு வந்து விடும் என்று கண்ணாயிரம் மனப்பால் குடித்தால் அது நடக்காது என்றே தகவல்கள் கூறுகின்றன. எது எப்படியோ… சவுக்கு வில் மிஸ் யூ மிஸ்டர் கண்ணாயிரம். பான் வாயேஜ். இவ்வளவு வாழ்த்துக்கள் சொன்னாலும், நீங்கள் சென்னை திரும்பி வரும் போது, உங்களுக்கு சஸ்பென்ட் உத்தரவு காத்துக் கொண்டிருந்தாலும் இருக்கும் என்பதை நினைக்கும் போது, சவுக்கின் நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறதே…. அய்யகோ….!!
http://www.savukku.net/home1/1328-2011-10-16-14-19-21.html
No comments:
Post a Comment