பெங்களூரு, இந்தியா: தமிழக முதல்வர் ஜெயலலிதா, விசாரணைக்காக பெங்களூரு தனி நீதிமன்றத்துக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்கு மிகக் கடுமையாகவே முயற்சி செய்கின்றார். ஆனால், அது ஒன்றும் சுலபமான காரியமல்ல என்றே தெரிகின்றது. வக்கீல் ஆச்சார்யா மிகக் கடுமையாக எதிர்க்கிறார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு வரமுடியாது என்று அவரது வக்கீல் மனு கொடுத்திருந்தார். பாதுகாப்பைக் காரணம் காட்டியிருப்பதால், மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும் என்றே முதல்வர் தரப்பு நம்பியிருந்தது.
ஆனால், இப்படியொரு மனு தாக்கல் செய்யப்பட்டவுடன் அரசு வக்கீல் ஆச்சார்யா கொதித்தெழுந்தார். தனது எதிர்ப்பை மிகக் கடுமையான வார்த்தைகளில் தெரிவித்துள்ளார்.
இதனால் முதல்வரின் மனு, சுலபமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்று நீதிமன்ற வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார், “எனது கட்சிக்காரர் இசட்-பிளஸ் பாதுகாப்பில் இருக்கிறார். இந்தப் பாதுகாப்பு வளையத்துடன் மாநிலம் விட்டு மாநிலம் வருவது அவ்வளவாகப் பாதுகாப்பானதல்ல. அவரது உயிருக்கு வெளிச் சக்திகளால் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவருக்கு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்!” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது நீதிமன்றத்தில் இருந்த அரசு வக்கீல் ஆச்சார்யா, “உமது கட்சிக்காரர் இசட்-பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால், மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்ய முடியாது என்கிறீர். ஆனால் அவர் சமீபத்தில் இதே மாநிலத்திலுள்ள மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வந்தாரே… அது எப்படி? தமிழ் நாட்டியிலிருந்து கர்நாடகாவுக்கு பயணம் செய்துதானே கோயிலுக்கு வந்தார்?
கோயிலுக்கு வரமுடியும் என்றால், கோர்ட்டுக்கு வரமுடியாதா? அவருக்குத் தேவையான பாதுகாப்பை நாங்கள் (கோர்ட்) ஏற்படுத்தித் தருகிறோம். இப்போது இங்கே காவிரி பிரச்னை போன்று எதுவும் இல்லாததால் பாதுகாப்பில் எவ்வித பிரச்னையும் இருக்காது.” என்று விடாக்கண்டனாக வாதிட்டார்.
நீதிபதி மல்லிகார்ஜூனையா, தீர்ப்பை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றப் படி ஏறுவாரா என்பது, அன்று தெரிந்துவிடும்
No comments:
Post a Comment