http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/06/120624_malaysia_helpfor_tamils.shtml
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ மலேஷிய அரசு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
மலேஷிய தமிழர் பேரவையிடம் இதற்கான காசோலையை மலேஷிய
அரசு வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கில் செயற்படும் அரசு சாரா
அமைப்புகள் மூலம் இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என அந்த அமைப்பின்
பிரதிநிதியும், மனித உரிமைகள் வழக்கறிஞருமான பசுபதி சிதம்பரம் பிபிசி
தமிழோசையிடம் தெரிவித்தார்.எனினும் மலேஷிய அரசு இந்த உதவியை உள்நோக்கத்துடன் செய்கிறதுது என்று தெரியவருமானால் அந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனநாயக செயல்கட்சியைச் சேர்ந்த மனோகரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மலேஷிய அரசு கொடுத்துள்ள நிதியுதவியை செயல்படுத்துவது குறித்த திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருகிறது எனவும், அது முடிந்தவுடன் இலங்கையின் வடகிழக்கில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவி வழங்கும் செயற்பாடுகள் தொடங்கப்படும் எனவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரின் போது, குடும்பத் தலைவரை இழந்துத் தவிக்கும் பெண்களின் வாழ்க்கையை முன்னெடுக்க இதன்போது முன்னுரிமைகள் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மலேஷிய நாடாளுமன்றத்தில், இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் தான் விவாதத்துக்கு முன்வைத்த ஒரு முன்மொழிவை நாடாளுமன்றம் நிராகரித்தமையும் , இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அண்மையில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்ததும் அரசு உண்மையாகவே இலங்கை தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்டுள்ளதா என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று மனோகரன் கூறுகிறார்.
இருந்த போதிலும் இந்த நிதியுதவியை தாங்கள் வரவேற்பதாகவும் அது நேர்மையாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்றும் மனோகரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment