Sunday, December 5, 2010

போர்க்குற்றவாளிகள் ராஜமரியாதையுடன் வந்து செல்ல பிரிட்டன் என்ன தமிழ்நாடா!

போர்க்குற்றவாளிகள் ராஜமரியாதையுடன் வந்து செல்ல பிரிட்டன் என்ன தமிழ்நாடா!

இலங்கை அதிபர் ராஜபக்சே சமீபத்தில் பிரிட்டனுக்கு சென்றார். ஆனால் பல்லாயிரம் தமிழர்கள் புலிக்கொடி தாங்கி அவருக்குக் காட்டிய எதிர்ப்பில் மிரண்டுபோய், கொழும்பு திரும்பிவிட்டார். அவரால் திட்டமிட்டபடி எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியவில்லை. தங்கியிருந்த ஹோட்டலிலேயே கிட்டத்தட்ட தமிழர்களால் சிறை வைக்கப்பட்ட நிலையில் தவித்தார்.

அந்த நேரம் பார்த்து, ராஜபக்சே மற்றும் அவரது ராணுவத்தின் கொடூர போர்க்குற்ற வீடியோக்களை சேனல் 4 தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப, உடனடியாக ராஜபக்சேவை கைது செய்து விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகமும் தமிழருடன் சேர்ந்து குரல் கொடுத்தது. தப்பித்து நாடு திரும்பினால் போதும் என்ற மன நிலையில், தன்னைக் கைது செய்துவிட வேண்டாம் என்று கெஞ்சியபடி கொழும்பு திரும்பினார்.

இதுகுறித்து ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், இலங்கை ராணுவத்தின் மிருகத்தனத்தையும் மிஞ்சிய படு மோசமான மனித உரிமை மீறலை, வீடியோவில் பார்த்த கொடூரங்களை வார்த்தைகளில் விவரித்துள்ளது.

மேலும் கூறுகையில், "இங்கிலாந்தில் உள்ள 'சேனல் 4’ சிங்கள அரசின் இனவெறிக் கொடூரங்களாக சமீபத்தில் ஒளிபரப்பிய இந்தக் காட்சிகள் உலகையே உலுக்கி இருக்கின்றன.

இலங்கை அதிபர் ராஜபக்சே லண்டனுக்கு வர ஆயத்தமான வேளையில், இந்தக் கொடூரக் காட்சிகளை அம்பலப்படுத்திய 'சேனல் 4’ தொலைக்காட்சி, ''ஈழத்தில் நடந்த கொடூரமான படுகொலைகள், கதற வைக்கும் கற்பழிப்புகள், உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாத அளவுக்குப் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி ரசித்திருக்கும் சிங்கள வெறித்தனங்கள் என நூற்றுக்கணக்கான காட்சிகளின் பதிவுகள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பார்ப்பதற்கான சக்தி இந்த உலகத்துக்குத்தான் இல்லை!'' என்று அறிவித்தது.

அதோடு, இனவெறியின் உச்சபட்சக் கொடூரமாக சிங்கள அதிகாரிகள் நடத்திய நெஞ்சு நடுங்க வைக்கும் அட்டூழியத்தை ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ பதிவாக உருவாக்கி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கும் அனுப்பி இருக்கிறது 'சேனல் 4’.

ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்தே 'சேனல் 4’ தங்களுக்குக் கிடைத்த வீடியோ பதிவுகளையும், புகைப்பட ஆதாரங்களையும் தொடர்ந்து உலகின் பார்வைக்கு வெளிச்சமாக்கி வருகிறது. ''அந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை!'' என ஆரம்பத்தில் மறுத்த சிங்கள அரசு, இப்போது ஒளிபரப்பாகும் அப்பட்டமான காட்சிகளைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிறது.

போர் நடந்தபோதும், ஆயிரமாயிரம் துயரங்களோடு போர் முடிவுக்கு வந்தபோதும் உலக நாடுகளும் ஐ.நா. சபையும் பாராமுகத்தை மட்டுமே பதிலாக்கின. ஆனால், 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகள் இப்போது இந்த உலகத்தைப் பதற வைக்கிறது.

இசைப்பிரியா சீரழித்துக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த ஐ.நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியான கிறிஸ்டோபர் ஹேன்ஸ், ''இந்தக் கொடூரக் காட்சிகள் குறித்து உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!'' என வலியுறுத்தி இருக்கிறார்.

பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் சிங்கள இனவெறி மீறலை விசாரிக்கச் சொல்லி ஐ.நா-வை வற்புறுத்தி வருகின்றன.

இதற்கு மத்தியில் கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். போர்க் கொடூரக் காட்சிகளைப் பார்த்து உறைந்து போன பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் ராஜபக்சே தங்கி இருந்த 'டோசெஸ்டர்’ ஹோட்டலை முற்றுகையிடவும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் ராஜபசேவின் உரையைப் புறக்கணிக்கவும் தயாரானார்கள்.

இதற்கிடையில், பிரிட்டனில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபை, ''பிரிட்டனிலேயே ராஜபக்சே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ராணுவ அத்துமீறலை நடத்திய அனைவரையும் பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் விசாரிக்க வேண்டும்!'' என அறிவிக்க... பதறிப்போனார் ராஜபக்சே. இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்சே உரையாற்ற வேண்டாம்!’ என அறிவிக்க... உடனடியாக ஹோட்டலுக்குத் திரும்பினார் ராஜபக்சே.

லண்டனில் இலங்கைத் தூதராக இருக்கும் அம்சா, (ஈழப் போர் நடந்த காலகட்டத்தில் இலங்கையின் துணைத் தூதராக சென்னையில் பணியாற்றிய அதே அம்சா.) தமிழகத்தில் செய்ததைப்போலவே லண்டனிலும் சில பத்திரிகையாளர்களைத் தன்வசமாக்கி ராஜபக்சேவின் விளக்கத்தை அறிவிக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளுக்கு எவ்வித விளக்கத்தையும் கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த ராஜபரக்சே, அனைத்து மீடியாக்களையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். 'ராஜபக்சே கைது செய்யப்படும் வரை போராட்டங்களைக் கைவிட மாட்டோம்!’ என பிரிட்டன் தமிழ்ப் பேரவையினரும் களமிறங்க... ராஜபக்சே பத்திரமாகக் கிளம்பிச் செல்ல தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்சே இலங்கை சென்று சேர்ந்தார்.

எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன... ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?!"

No comments: