Saturday, August 14, 2010

உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து தேவேந்திரகுல வேளாளர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி:ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் பசுபதிபாண்டியன் பேசினார்.ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரை சஸ்பெண்ட் செய்த தமிழக அரசை கண்டித்து நெல்லையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில சட்ட ஆலோசகர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். தலைவர் முருகேசபாண்டியன் வரவேற்றார்.


நிறுவனத்தலைவர் பசுபதிபாண்டியன் பேசியதாவது:நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர் உமாசங்கர். ஊழலை கண்டுபிடித்து கூறிய காரணத்தால் உள்நோக்கத்துடன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜாதிச்சான்றை மாற்றி வழங்கியதாக அரசு கூறுகிறது. அவர் பணியில் இருந்த இத்தனை ஆண்டுகள் இது தெரியவில்லையா. சம்பந்தப்பட்ட துறை இதை கண்டுபிடிக்காதது ஏன்.உமாசங்கர் மீதான நடவடிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மாவட்ட தலைநகரங்களிலும், சென்னையிலும் போராட்டம் நடக்கும். இதர அமைப்புகளுடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். எஸ்.சி.எஸ்.டி.,பின்னடைவு காலியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு பசுபதிபாண்டியன் பேசினார்.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

No comments: