Saturday, November 15, 2008

டாக்டர் அம்பேத்கார் சட்ட கல்லூரி இனவெறி பிடித்த மாணவன் (கொலை வெறியன்) தாக்க பட்டான்.

டாக்டர் அம்பேத்கார் சட்ட கல்லூரி இனவெறி பிடித்த மாணவன் (கொலை வெறியன்) தாக்க பட்டான்.
Ref: www.devendrakural.tk

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதல்” என்ற தலைப்பில் இன்றைய காலைத் தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட அல்லாத மாணவர்களுக்கும் இடையிலான மோதல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு தனது செய்தியில் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. தலித் அல்லாத மாணவர்களின் சாதி என்ன என்பது பற்றி மட்டும் வாசகரின் ஊகத்துக்கு விட்டுவிட்டது.

“ஒரு மாணவன் பிணம் போலக் கிடக்க வேறு சில மாணவர்கள் அவனை ஆத்திரம் தீர கட்டையால் அடிக்கும் காட்சியை” சன் செய்தி திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. காணும் எவரையும் பதைக்கச் செய்கிறது அந்தக் காட்சி. இந்தக் காட்சியின்படி “ஈவிரக்கமில்லாமல் அடிக்கும் அந்த மாணவர்கள்தான் குற்றவாளிகள்” என்ற முடிவுக்கே பார்வையாளர்கள் வரமுடியும். அடிக்கும் மாணவர்கள் எந்தச் சாதி, அடிபடும் மாணவர்கள் என்ன சாதி என்பது பற்றி பத்திரிகைகளோ தொலைக்காட்சியோ எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்நேரம் மாணவர் உலகத்துக்கும் சாதிச்சங்கத் தலைவர்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மாணவர்களின் “சாதி அடையாளம்” பற்றிய தகவல் போய்ச் சேர்ந்திருக்கும். யார் நம்மாளு என்பதைத் தெரிந்து கொண்டபின் மேற்கூறிய புகைப்படங்களும் காட்சிகளும் புது வீரியம் பெற்றுத் தமிழ் நாட்டை எரிக்கத் தொடங்கும். ஏற்கெனவே சென்னை எருக்கஞ்சேரியில் ஒரு அரசுப்பேருந்து எரிக்கப்பட்டுவிட்டது. இப்படங்களினால் வர இருக்கும் நாட்களில் 1998 இல் தென் மாவட்டங்களில் நடந்தது போன்ற ஒரு சாதிக் கலவரம் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்தால் அது அதிசயம்.

அந்த அதிசயம் நடக்கவேண்டும் என்பதே எமது விருப்பம்.

A Law Student about to attack minority students at Dr.Ambedkar Law College, Chennai, India


இனி சம்பவத்திற்கு வருவோம்.

சமீபத்தில் பசும்பொன் தேவர் ஜெயந்தியைக் கொண்டாடிய, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த தேவர் சாதி மாணவர்கள், அதற்காக வெளியிட்ட சுவரொட்டியில் சட்டக் கல்லூரியின் பெயரில் இருந்த “அம்பேத்கர்” என்ற சொல்லைக் கவனமாகத் தவிர்த்து விட்டு வெறுமனே சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று வெளியிட்டதாகவும், இதனால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கோபம் கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து சிறு சிறு பூசல்களாக உருவாகிப் புகைந்து கொண்டிருந்த முரண்பாடு நேற்றைய மோதலில் வெடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த விவரம் பற்றிய முழு உண்மை அல்லது மேலும் பல புதிய தகவல்கள் இனி வெளிவரலாம்.

ஆனால் நடைபெற்றுள்ள இந்த துயரச் சம்பவத்தை விளங்கிக் கொள்ள இப்படிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை. தேவர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமையும் தமிழகம் அறிந்ததுதான். அதன் வடிவங்கள் வேறாக இருக்கலாம், சம்பவங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் அதன் சாரம் இதுதான். தென்மாவட்டங்களில் நடைபெறும் பல கலவரங்களுக்கு சிலை உடைப்புகள்தான் துவக்கப் புள்ளிகளாக இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அவை வெறும் கற்சிலைகள் பற்றிய பிரச்சினைகள் அல்ல.


A Law Student going to attack minority students at Dr.Ambedkar Law College, Chennai, India. All media backed by Caste-Hindus never shown this picture but shown the pictures and movies in which this guy gets attacked by minority students.

அம்பேத்கரை சட்டமேதை என்று இந்தியா மேலுக்குக் கொண்டாடினாலும், அவருக்கு பாரத் ரத்னா விருது கொடுத்து கவுரவித்திருந்தாலும், அவரது பிறந்த நாளில் சர்வ கட்சித் தலைவர்களும் சிலைக்கு மாலை மரியாதை செய்தாலும், அவை எல்லாம் தேர்தலுக்காக பாரதிய ஜனதா தலைவர்கள் “ரம்ஜான் கஞ்சி” குடிப்பதைப் போன்ற நிகழ்வுகள்தான்.

மராத்வாடாவின் மராத்தா சாதியினரிலிருந்து தமிழகத்தின் தேவர் சாதியினர் வரை எல்லா ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் அம்பேத்காரின் பெயர் வேப்பங்காயாக கசக்கிறது என்பதே உண்மை. எனவே தேவர் ஜெயந்திக்கு போடும் சுவரொட்டியில் “அம்பேத்கர் பெயர் இடம் பெறக்கூடாது” என்று சாதி கௌரவம் அந்த மாணவர்களைத் தடுத்திருக்கும். இதனை புலனாய்வு செய்தெல்லாம் கண்டுபிடிக்கத் தேவையில்லை. இது உள்ளங்கை நெல்லிக்கனி.

தங்களைத் தீண்டத்தகாதவனாக நடத்தும் ஆதிக்க சாதியினர் தங்கள் தலைவரையும் அவ்வாறே நடத்துவதை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. தட்டிக் கேட்டிருக்கிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக இரு பிரிவு மாணவர்களுக்கும் உரசலும், மோதலும் நடந்திருக்கிறது. இந்த உரசல் அடுத்தடுத்து சிறு சிறு சம்பவங்களால் தீப்பிடித்திருக்கலாம். அத்தகைய ஒவ்வொரு சம்பவத்திலும் தேவர் சாதி மாணவர்கள்தான் தவறு செய்திருப்பார்கள், தலித் மாணவர்கள் தவறே செய்திருக்க மாட்டார்கள் என்று நாம் ஊகிக்க வேண்டியதில்ல்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்களும் தவறிழைத்திருக்கலாம். ஆனால் இந்த மோதலின் அடிப்படை அத்தகைய சிறு சம்பவங்களிலிருந்து வரவில்லை என்பதே முக்கியம். சொல்லப்போனால், “சுவரொட்டியில் அம்பேத்கர் பெயர் இல்லை” என்ற காரணம் கூட இந்த மோதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணம் அல்ல. மோதலின் அடிப்படை என்பது தம் அன்றாட வாழ்க்கையில் தாழ்த்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் அனுபவிக்கும் சாதிக் கொடுமையில் இருக்கிறது; புதிய தலைமுறை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அதை எதிர்ப்பதால், ஆதிக்க சாதியினருக்கு வரும் கோபத்தில் இருக்கிறது இந்த மோதலின் அடிப்படை.

புகைப்படங்களின் பிந்தைய பிரேம்களில் கட்டையால் அடிவாங்கும் மாணவன், சற்று நேரத்துக்கு முன் கையில் ஒரு அடி நீளக் கத்தியுடன் பாய்ந்து வருவதையும் பார்க்கிறோம். இந்தக் கத்தி ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனைப் பதம் பார்த்திருக்கிறது. விளைவு நாம் தொலைக்காட்சிகளில் கண்ட அந்தக் காட்சி.

சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் விடுதியில் தங்கிப் படிக்கும் பெரும்பாலானோரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச சேர்ந்தவர்கள். டே ஸ்காலர்ஸ் மாணவர்களில் சாதி இந்துக்கள் அதிகம். மற்ற கல்லூரிப் பட்டங்களை படிப்பதற்கும் வழக்கறிஞர் கல்விப் படிப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. பொறியியல், மருத்துவம் போன்ற வசதியான படிப்புகளைப் படிக்க வைக்க வாய்ப்பில்லாத ஏழை நடுத்தர வர்க்கத்தினர்தான் தம் பிள்ளைகளை சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார்கள். பி.ஏ, பி.எஸ்.ஸி படிப்பதை விட இது பரவாயில்லை என்று வருபவர்களும் அதிகம். நிச்சயமற்ற வருவாய், நிச்சயமற்ற வாழ்க்கை என்பதை மட்டுமே வழங்கும் வழக்குரைஞர் தொழிலை கொஞ்சம் வசதி படைத்தோர் யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த வகையில் சென்னை கல்லூரியில் மோதிக்கொள்ளும் இரு தரப்பு மாணவர்களும் சாதாரண வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

வசதி இல்லை என்பதால் சாதி உணர்வு குறைந்து விடுவதில்லையே. ஆதிக்க சாதி மாணவர்கள் என்னென்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்று நமக்குத் துல்லியமாகத் தெரியாது. இந்தப் பிரச்சினையில் தேவர் ஜெயந்தி சம்பந்தப்பட்டிருப்பதால் தேவர் சாதி மாணவர்களின் பாத்திரம் முக்கியமானது என்று ஊகிக்க முடிகிறது. தேவர் சாதியினர், சாதிய ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னிலை வகிப்பதால் பிறரைக் காட்டிலும் இவர்களிடம் ஆதிக்க மனோபாவம் தூக்கலாகவே இருப்பதைக் காண்கிறோம்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களோ மற்ற படிப்பு படிப்பதற்கு வசதியில்லாதவர்கள். இதையாவது படித்து முன்னுக்கு வரவேண்டுமென ஆர்வம் கொண்டவர்கள். சென்னை விமான நிலையத்திற்கு எதிரே இருக்கும் திரிசூலம் மலையில் கல்லுடைக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திர தொழிலாளிகளின் குடும்பங்கள் வசிக்கின்றனர். எந்த வசதியுமில்லாமல் படிக்க வரும் பல மாணவர்களை இக்குடும்பங்கள் ஆதரிப்பது வழக்கம். ஏழ்மை விதிக்கப்பட்டிருக்கும் தம் சமூகத்தில் இந்தப் பையன்களாவது படித்து முன்னுக்கு வரட்டுமே என்று அம்மக்கள் இவர்களை ஒரு லட்சியத்துடன் பராமரிப்பதை இன்றும் பார்க்கலாம்.

தென்மாவட்டங்களில் இருக்கும் எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் சாதி இந்துக்களுக்குச் சொந்தமானவை என்பதால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இங்கே நவீன அடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். “கோட்டா மாணவர்கள், சத்துணவு கோஷ்டி”, என்று பலவிதங்களில் அங்கே தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கேலி செய்யப்படுவது வழக்கம். வகுப்பறைக்குள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் சுற்றறிக்கை வந்தாலே மேல்சாதி மாணவர்கள் ஏளனப்பார்வையுடன் சிரிப்பது வழக்கம். இப்படி பல்வேறு வகைகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அநீதியாக நடத்தப்படுவதால் மாணவர்கூட்டம் தெளிவாக சாதிய ரீதியாக பிரிந்திருப்பதும் அவர்களுக்குள் பல சர்ச்சைகள், சண்டைகள் வருவதும் வழக்கம். தென் மாவட்டங்களைப் போல வெளிப்படையாக இல்லையென்றாலும், சென்னைக் கல்லூரியிலும் சாதி உணர்வு நீறு பூத்த நெருப்பாகவே இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

90களின் இறுதியில் நடந்த தென்மாவட்டக் கலவரத்தில் வாழ்க்கை இழந்த ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனின் கதை இது. பதினெட்டு வயது கூட நிரம்பாத அந்த தாழ்த்தப்பட்ட மாணவன் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டான். பிறகு குண்டர் சட்டத்தில் சிறைவாசம் தொடர்ந்தது. பாளையங்கோட்டை சிறையில் தேவர் சாதி கைதிகள் அவனைப் பழி வாங்குவதற்குத் திட்டம் தீட்டியிருக்கின்றனர். இதை அறிந்த அந்த மாணவன் முந்திக் கொண்டான். சாப்பிடும் அலுமினியத் தட்டை உடைத்துக் கத்தியாக்கி தேவர் சாதிக் கைதி ஒருவரைக் குத்தி விட்டான். இப்போது அந்த மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? அவனைப் படிக்க வைக்க விரும்பிய பெற்றோரின் கனவு என்னவாக இருக்கும்?

கொடியன் குளம் கலவரத்தை ஒட்டி பல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை விட்டு நீக்கம் செய்யப்பட்டார்கள். இதனாலேயே பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி பறிபோனது. இன்றைக்கும் அவர்கள் கலவர வாய்தாவுக்காக நீதிமன்றத்திற்கு அலைந்தவாறு வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். சாதி இந்துக்களுக்குச் சொந்தமான தனியார் கல்லூரிகள் மட்டும்தான் இப்படி அவர்களை நடத்துகின்றன என்பதில்லை. சென்னையில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் அனைத்திற்கும் நீங்கள் சென்று பார்த்தால் இந்த அரசு தாழ்த்தப்பட்ட மாணவர்களை எப்படி தொழுவத்தில் இருக்கும் மாடுகளைவிட கேவலமாக நடத்தி வருகிறது என்பதைப் பார்க்கலாம். இப்படி சமூக ரீதியிலும், அரசாங்க ரீதியிலும் பல்வேறு தடைகளை தாண்டித்தான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தலையெடுக்க போராடி வருகிறார்கள்.



இப்போது மீண்டும் சட்டக்கல்லூரிக்குத் திரும்புவோம்.

ஒரு விபரீதத்தை விதைக்கிறோம் என்று தெரிந்தே ஊடகங்கள் சட்டக்கல்லூரிக் காட்சிகளை விலாவரியாகப் பதிவு செய்திருக்கின்றன. “போலீசு கைகட்டி வேடிக்கை பார்த்தது” “கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று ஏதேனும் ஒன்றை நிரூபிப்பதே தங்கள் நோக்கம் என்று அவர்கள் கூறிக்கொள்ளலாம். சில போலீசார் பணிநீக்கம், மாற்றல், ஒரு சட்டசபை வெளிநடப்பு என்பதற்கு மேல் இவர்கள் யாருக்கும் எதுவும் நடக்கப் போவதில்லை.

ஆனால் தமிழகத்துக்கு என்ன நடக்கப் போகிறது? மீண்டும் பல கொடியன்குளங்கள் துவங்கலாம். தமிழகமெங்கும் அடுத்த சுற்று கலவரத்தை இச்சம்பவம் ஆரம்பித்து வைக்கலாம். மீண்டும் பல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கள் வாழ்க்கையினை இழந்து ஆயுள் கைதியாக சிறைக்குள் செல்லலாம். கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் சாதி கௌரவத்தை விட முடியாத ஆதிக்க சாதி மாணவர்களும் தங்கள் வாழ்க்கையினைச் சிறைக்குள் தொலைக்க நேரிடலாம். பிறகு அவர்கள் தாதாக்களாகவோ, சாதிச் சங்கத் தலைவர்களாகவோ பதவி உயர்வு பெற்று தமிழக்தைத் தொடர்ந்து சாதிவெறியின் பிடியில் இருத்தி வைக்கலாம்.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சாதி ரீதியாக பிரித்து பயிற்றுவித்திருக்கும் பார்ப்பனியத்தின் விளைவாக நடக்கும் இந்தக் கொடுமைகளுக்கு இதுவரை விடிவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு அடுத்து வர இருக்கும் கலவரச் செய்திகளுக்காக அச்சத்துடன் காத்திருக்க வேண்டும். அல்லது இந்த வெறித்தனத்தைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி நம்மால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும்.

நன்றி :வினவு

No comments: