Monday, November 24, 2008

தமிழகத்தில் பலம் பெறுகிறது பகுஜன் சமாஜ்

தமிழகத்தில் பலம் பெறுகிறது பகுஜன் சமாஜ்

நவம்பர் 25,2008,00:00 IST




சென்னை : ""பார்லிமென்ட் தேர்தலில், கட்சி வெற்றிக்காக தீவிர பிரசாரம் செய்ய இருக்கிறேன்'' என பகுஜன் சமாஜ் கட்சியில், இன்று இணையவுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி கூறினார். தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வலுப்படுத்துவதில், அக்கட்சி தலைவர் மாயாவதி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய செல்வம், பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த அவருக்கு கட்சி தமிழக தலைவர் பதவி வழங்கப்பட்டது.



இவரை தொடர்ந்து "புதிய கோடாங்கிகள்' இதழ் ஆசிரியரும், பெண்கள் முன்னேற்றத்திற்கு போராடி வருபவருமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி கட்சியில் இணைவதற்கு முடிவு செய்தார். அவரை உ.பி.,யில் உள்ள தனது வீட்டிற்கு நேரில் அழைத்த மாயாவதி,"தமிழகத்தில் பெண்கள் வளர்ச்சிக்கு போராடி வருவதை அறிந்தேன். பகுஜன் வளர்சிக்காக எங்களுடன் நீங்கள் இணைந்து செயல்படவேண்டும்' என்று கூறியுள்ளார். இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட வசதியாக ஐ.ஏ.எஸ்., பதவியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாமி விருப்ப ஒய்வு பெற்றார்.


பகுஜன் சமாஜ் கட்சியில், சிவகாமி இணையும் விழா, சென்னை தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது. கட்சியின் மேலிட பார்வையாளர் சுரேஷ் மானே, தமிழக நிர்வாகிகள் செல்வம், ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் நிருபரிடம் சிவகாமி கூறுகையில்,"கட்சியில் இணைந்தபிறகு தமிழகத்தில் உள்ள பட்டி, தொட்டியெல்லாம் சென்று மாயாவதியின் கொள்கைகளை மக்களிடம் விளக்குவேன். பார்லிமென்ட் தேர்தலில் கட்சி வெற்றிக்காக தீவிர பிரசாரம் செய்ய இருக்கிறேன். தற்போது 12 முதல் 13 சதவீத பெண்களே அரசியலில் உள்ளனர். இதை 50 சதவீத அளவிற்கு உயர்த்துவதற்கு பாடுபடுவேன்' என்றார்.


சிவகாமிக்கு தென் மாநிலங்கள் ஒருங்கிணைப்பாளர் அல்லது சுரேஷ் மானேவை போல தேசிய பொதுச்செயலர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் சிலரையும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இழுக்கும் வேலைகள் துவங்கி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அக்கட்சி வலுப்பெறும் வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.

No comments: