Monday, November 1, 2010

இளைஞர்கள், டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும், சினிமாவிற்கும் செல்வதை தவிர்த்துவிட்டு பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்ல வேண்டும் '

திருநெல்வேலி : "இளைஞர்கள், டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும், சினிமாவிற்கும் செல்வதை தவிர்த்துவிட்டு பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்ல வேண்டும் ' என, ராமதாஸ் தெரிவித்தார்.

தேவேந்திரகுல மக்கள் தலைவர் இமானுவேல் சேகரனின் 87வது பிறந்த தின விழா நெல்லையில் நடந்தது. தேவேந்திரகுல வேளாளர்சமுதாயத்தின் சார்பில் நடந்த விழாவில், பா.ம.க., தலைவர் ராமதாஸ் பங்கேற்றார்.

அவர் பேசியதாவது:தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு என்றைக்கும் பாதுகாப்பாக பா.ம.க., விளங்கும். 1988ல் புதுவையில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் ராமநாதபுரத்திற்கு இமானுவேல்சேகரன் பெயரை சூட்டவேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். மேலும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களை ஆதிதிராவிடர் என்ற பட்டியலில் இருந்து நீக்கி, தேவேந்திரகுலம் என்றழைக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறோம். இளைஞர்கள், டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும், சினிமாவிற்கும் செல்வதை தவிர்த்துவிட்டு பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்ல வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தை உயர்த்தமுடியும். இமானுவேல் சேகரனுக்கு ராமநாதபுரத்தில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

கட்சிக் கொடியால் பரபரப்பு:தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர், புதிய தமிழகம் கட்சிக் கொடியின் வண்ணத்தை போல சிவப்பு, பச்சை நிற கொடிகளை பா.ம.க., விழா நிகழ்ச்சி அருகே தோரணமாக கட்டியிருந்தனர். இதற்கு புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் கட்சிக் கொடியை வேறு அமைப்புகள் கட்டக்கூடாது என, பு.த.மாவட்ட நிர்வாகி செல்லப்பா போலீசில் புகார் கூறினர். போலீஸ் உதவிகமிஷனர் ஏற்பாட்டில் மாநகராட்சி ஊழியர்கள், அனுமதியின்றி கட்டப்பட்ட அந்த சமுதாய கொடிகளை அகற்றினர். இதற்கு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர்இது சமுதாய கொடி, புதிய தமிழகம் கட்சி துவக்கும் முன்பாகவே இந்த கொடியை பயன்படுத்திவருகிறோம், இதை ஏன் அகற்றுகிறீர்கள் என எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பண்டிகை நாட்களில் டாஸ்மாக்கை மூட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை : கோவில்பட்டியில் நிருபர்களிடம் ராமதாஸ் நேற்று கூறியதாவது:பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் வியாபாரம் அதிகம் நடக்கிறது. குடி குடியை கெடுக்கும் என கூறும் அரசு, கடந்த பண்டிகை காலத்தில், 150 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை செய்தது. இந்தமுறை அதை 300 கோடியாக்க நிர்ணயம் செய்துள்ளது. பண்டிகை தினங்களில் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள், கத்தார் நாட்டில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனவே, மீனவர்களின் பிரச்னை தீர கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி. மதுரை கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், தாமிரபரணி மணல் குவாரிகளில் இன்னமும் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள குழுவில் பெற்றோர் சார்பில் ஒருவரை பிரதிநிதியாக சேர்க்க வேண்டும். அப்போது தான், பொதுமக்களின் சந்தேகம் தீரும். அந்த கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான பணிவரம்பை அரசு நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

No comments: