Friday, November 5, 2010

சிவப்பு, பச்சை வண்ணக் கொடி யாருக்குச் சொந்தம், புதிய தமிழகம் கட்சிக்கா அல்லது தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கா



kumudam.com
சி
வப்பு, பச்சை வண்ணக் கொடி யாருக்குச் சொந்தம், புதிய தமிழகம் கட்சிக்கா அல்லது தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கா என்பதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டி ருக்கிறது. டாக்டர் ராமதாஸ் விழாவில் பச்சை, சிவப்புக் கொடி கட்ட புதிய தமிழகம் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவே, அக்கொடிகளை போலீஸ் அகற்றி குப்பை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்ற சம்பவம் தேவேந்திர இயக்கங்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 31-ம் தேதி நெல்லையில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 87-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்க நிர்வாகிகளோடு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தேவேந்திர குல வேளாளர் கூட் டமைப்பினர் சிவப்பு, பச்சைக் கொடிகளை ரோட்டின் இருமருங்கிலும் கட்டியிருந்தனர். கூடவே பா.ம.க. கொடியும் பறந்தது.

நிகழ்ச்சியன்று காலை அங்கு வந்த புதிய தமிழகம் கட்சியினர், சிவப்பு, பச்சை வண்ணக் கொடி புதிய தமிழகம் கட்சிக்குச் சொந்தமானது, அதை வேறு யாரும் பயன்படுத் தக் கூடாது என்று தகராறு செய்ததோடு, காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்த விஷயம் மெல்ல அருகிலிருக்கும் கிராமங்களிலும் பரவவே, புதிய தமிழகம் க ட்சித் தொண்டர்கள் போலீஸ் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு திரளத் தொடங்கினார்கள். இதனால் டென்ஷனான போலீஸார், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ரவி தேவேந்திரனை காவல் நிலையம் அழைத்து வந்து, கொடியை அப்புறப்படுத்துமாறு வறுபுறுத்தினர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

போலீஸார் புதிய தமிழகம் கட்சியினரிடம், ‘‘இது உங்கள் கொடிதான் என்பதற்கு என்ன ஆதாரம்?’’ என்று கேட்க, சென்னையிலிருந்த டாக்டர் கிருஷ்ணசாமி தங்கள் கொடியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்ததற்கான ஆதாரங்களை ஃபேக்ஸ் செய்திருக்கிறார்.

அதை ஏற்றுக்கொண்ட போலீஸார், ‘‘தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இது புதிய தமிழகம் கட்சிக்குச் சொந்தமான கொடிதான். எனவே, நீங்கள் கட்டியி ருக்கும் சிவப்பு, பச்சை வண்ணக் கொடிகளை அவிழ்த்து விடுங்கள்’’ என்று கூறினார்கள். அதை மறுத்த தேவேந்திர குல இயக்கங்கள் டாக்டர் ராமதாஸிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அவரோ, சொந்தங்களுக்குள் பிரச்னை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.

இதனைத் தொடர்ந்து போலீஸாரே அக்கொடிகளை அவிழ்த்து அதை மாநகராட்சி குப்பை வண்டியில் போட்டுக் கொண்டு புறப்பட்டனர். சிவப்பு, பச்சைக் கொடிகள் குப்பை வண்டியில் கிடப்பதைப் பார்த்த தேவேந்திர குல இயக்கத்தினர் பயங்கர டென்ஷனாகி குப்பை வண்டியில் ஏறி கொடிகளை எடுத்துக் கிழே வீசினர்.

இதனால் போலீஸாருக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட, போலீஸார் லேசான தடியடி நடத்திய பிறகே கொடிகளைக் கொண்டு செல்ல முடிந்தது. இதனைத் தொடர்ந்து தேவேந்திரகுல வேளாளர் இயக்கத்தினர் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பா.ம.க.வினர் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்ற பிறகே பிரச்னை முடிவுக்கு வந்தது.

இதுபற்றி புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியனிடம் பேசினோம். ‘‘சிவப்பு, பச்சை வண்ணக் கொடி புதிய தமிழகம் கட்சிக்குச் சொந் தமானது. தலித் மக்களுக்குச் சொந்தமானது அல்ல. அவர்கள் கொடியின் நடுவில் அம்பு படம் போடப்பட்டிருக்கும். தவிர, தேர்தல் கமிஷனிலும் நாங்கள் கட்சிக் கொடியை பதிவு செய்து அங்கீகாரம் வாங்கியிருக்கிறோம். அப்படியிருக்கும்போது எங்கள் கொடியை மற்றவர்கள் பயன்படுத்துவதை எப்படி அனுமதிக்க முடியும்? அதனால்தான் முறைப்படி போலீஸில் சொல்லி தேர்தல் கமிஷனின் அங்கீகார கடிதத்தைக் காட்டி கொடியை அப்புறப்படுத்தினோம்’’ என்றார்.

தேவேந்திர குல மக்கள் முன்னேற்றச் சங்கத் தலைவர் ரவி தேவேந்திரனிடம் பேசினோம். ‘‘1940-ம் ஆண்டு தேனி மாவட்டம் தேக்கம்பட்டி பாலசுந்தரம்தான் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தைத் தொடங்கினார். 1954-ம் ஆண்டு இச்சங்கத்திற்கென சிவப்பு, பச்சைக் கொடியை வடிவமைத்து அறிமுகப்படுத்தினார். அன்று முதல் அது தேவேந்திரகுல வேளாளர் சமுதாயக் கொடியாகவே விளங்கி வருகிறது. எங்கள் கிராமங்களில் போய்ப் பாருங்கள்... வீடு, கோயில், சமுதாயக் கூடங்கள் என்று அனைத்தி லுமே சிவப்பு, பச்சை வண்ணம் வரையப்பட்டிருக்கும். தேவேந்திர குல மக்களின் அடையாளமே சிவப்பு, பச்சைதான்.

டாக்டர் கிருஷ்ணசாமியைப் பொருத்தவரை அவர் முதன்முதலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேவேந்திர குல கூட்டமைப்பு சார்பில்தான் வேட்பாளராய் களமிறங்கினார். அதனால்தான் சமுதாயக் கொடியைப் பயன்படுத்த முடிந்தது.



பின்னர் அவர் புதிய தமிழகம் கட்சியைத் தொடங்கி இதே கொடியை பயன்படுத்திய போதும் அவர் மக்களுக்கு நல்ல அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவார் என்று நம்பியதால்தான் மக்கள் அமைதியாக இருந்தனர். அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இம்மானுவேல் சேகரன் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவில்லத்தில் ல ட்சக்கணக்கான மக்கள் சிவப்பு, பச்சை வண்ணக் கொடிகளுடன் திரண்டார்களே, அப்போது எங்கே போனார்கள் புதிய தமிழகம் கட்சியினர்? இப்போதும் பசுபதி பாண் டியன் இதே கொடியைத்தான் பயன்படுத்துகிறார். தைரியம் இருந்தால் அவரிடம் போய் கேட்க வேண்டியதுதானே?’’ என்றவர்,

‘‘கொடிப்பிரச்னை தொடர்பாய் எல்லா தேவேந்திரகுல இயக்கங்களுடன் பேசி வருகிறோம். சமுதாயக் கொடி மீட்புக்குழு ஒன்றை அமைத்து, புதிய தமிழகம் உள்பட எந்த அரசியல் கட்சியும் சமுதாயக் கொடியைப் பயன்படுத்தக்கூடாது என்று மக்களிடம் பிரசாரம் செய்யப்போகிறோம். மீறி பயன்படுத்தினால் அவர்களை இந்த சமுதாயம் பார் த்துக் கொள்ளும்’’ என்றார் ஆவேசமாக.

தென் மாவட்டங்களில் கொடிப்பிரச்னை விஸ்வரூபமெடுக்கும் முன்பு அரசு தலையிடுவது அவசியம்.
நோட்டீஸ்!

இந்தக் கொடிப்பிரச்னையைத் தொடர்ந்து ராமதாஸ் கலந்து கொண்ட கூட்டத்தில் முன்னதாக, பிட் நோட்டீஸ் ஒன்றை தேவேந்திர குல மக்கள் கட்சியினர் விநியோகம் செய்தனர். ‘‘நான்தான் கிருஷ்ணசாமி பேசுகிறேன்’’ என்ற தலைப்பில் அவரைப்பற்றி அவரே கூறும் வண்ணம் அச்சடிக்கப்பட்ட அந்த நோட்டீஸில் இருக்கும் வாசகங்கள் அனைத்தும் பிரசுரிக்க முடியாதவை. டாக்டர் கிருஷ்ணசாமியின் இமேஷை அதல பாதாளத்திற்குள் தள்ளும் அந்த நோட்டீஸை பலரும் ஆர்வமாக வாங்கிப் படித்தனர்.

--Idi

No comments: