Tuesday, September 13, 2011

ஜான் பாண்டியன் தேவேந்திரர்

தேவேந்திரர்களின் ஆயுதம் வன்முறை!

by Thamburaj Dharmaraj on Tuesday, September 13, 2011 at 6:56am
தலித் மக்கள் தங்கள் விடுதலையை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும், அதற்கான வழிமுறைகள் என்ன என்று சொல்வதும், அதற்கு மாறாக சம்பவங்கள் நடக்கும் பொழுது அத்தகைய எழுச்சிகளை புறக்கணிப்பது அல்லது கண்டிப்பதும் கூட அடக்குமுறையின் வடிவங்கள் தான். கடந்த சில நாட்களாக பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்குப் பின்பான விவாதங்களில் எல்லா தரப்பினராலும் (தலித் ஆதரவாளர்கள், எதிராளிகள், நடு நிலைமையாளர்கள் (அப்படி யாரும் இருக்க முடியாது என்பது வேறு விஷயம்), அரசு, ஊடகங்கள்) சொல்லப்படும் ஒரு தகவல் - ஜான் பாண்டியன், வன்முறையைத் தூண்டி விடும் அரசியல் ரௌடி!
ஜான் பாண்டியனைப் பற்றிய சித்திரங்கள் இப்படித்தான் தீட்டப்பட்டுள்ளன. ஊடகங்களில் அவரைப் பற்றி இப்படித்தான் திரும்பத் திரும்ப இப்படித்தான் எழுதுகிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்த ஜான் பாண்டியன் இப்படியானவர் இல்லை. பாளையங்கோட்டையில் வாழ நேர்ந்த எந்த தலித்திற்கும் அவர் இப்படியானவர் இல்லை. 1980களில் திரு நெல்வேலிப் பகுதிகளில் நிலவிய கொடூரமான சாதிய அடக்குமுறையை தனியொரு நபராக எதிர்த்துப் போராடி வெற்றி கொண்ட நபராகத் தான் இன்னமும் நாங்கள் ஜான் பாண்டியனைப் பார்க்கிறோம்.
திரு நெல்வேலி பற்றி புதுமைப்பித்தன் கதைகளிலோ அல்லது வண்ணதாசன், வண்ண நிலவன் கதைகளிலோ அல்லது சமீபமாக சுகாவின் 'மூங்கில் மூச்சிலோ' படித்து ஒரு கற்பனையை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களை அப்புராணி என்று தான் சொல்லத் தோன்றும். வண்ணதாசன் கதைகளில் வருவதைப் போல பூக்கள் தூவப்பட்ட நகரமாக திரு நெல்வேலி என்றைக்குமே இருந்ததில்லை. அதுவும் எல்லா தமிழக ஊர்களைப் போல சாதிகளால் கட்டப்பட்ட நகரம் தான். கோவில், கோவிலை சுற்றி சாதித் தெருக்கள், அதன் புற வெளியில் சாதி குடியிருப்புகள், சாதி கிராமங்கள் என்று தாமிரபரணிக் கரையெங்கும் சாதி தான் வளர்ந்திருக்கிறது. அதன் அருகிலேயே உருவாகியிருக்கும் பாளையங்கோட்டை இன்னும் ஒரு படி மேலே. அங்கே ஏராளமான சாதிக் கோட்டைகள் தான் இருந்தன.
பாளையங்கோட்டையின் தென்மேற்குப் பகுதியெங்கும் கோனார் என்று சொல்லப்படும் யாதவர் (இப்போதெல்லாம் இப்படி அழைப்பதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் - ஆதாரம்: அவர்களது திருமண, காதுகுத்து, கருமாதி சுவரொட்டிகள்) கோட்டை. மேற்கே பாளையங்கால்வாயை ஒட்டிய பகுதிகள் முழுக்க தேவர்மார் கோட்டை (பருத்திமார், விளக்குமார் போல இப்படித்தான் தங்களை அழைக்க வேண்டும் என்பது தான் இவர்களது ஆசை). சமாதான புரம் என்று சொல்லக்கூடிய கிழக்கு பகுதியில் கிறிஸ்தவ நாடார்களின் குடியிருப்புகள். வடக்குப் பகுதியில் தேவேந்திரர்களின் 'பச்சேரி' (தேவேந்திரர்களின் குடியிருப்புகளை 'பள்ளச்சேரி' என்று சொல்வது தான் தமிழ் நாகரீகம்).
1980 கள் வரை பாளையங்கோட்டையை யாதவ மற்றும் தேவர் தாதாக்கள் தான் ஆண்டு வந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்தது பற்றியோ, ஜன நாயக அரசு ஒன்று ஆட்சிசெய்கிறது என்பது பற்றியோ இந்த தாதாக்களுக்கு கவலையில்லை. இந்த தாதாக்கள் பெரும்பாலும் கர்லாக்கட்டை சுற்றும் கட்டுமஸ்தர்களாகவே இருந்தனர். அவர்களைப் பற்றி ஏராளமான கதைகள் வழக்கத்தில் இருந்தன. ஊரில் ஏதாவது பிரச்சினையென்றால் இந்த தாதாக்கள் தானாகவே முன்வந்து அடித்து உதைத்து பிரச்சினையை தீர்த்து வைப்பார்கள் என்பதாகவே பல கதைகள் இருக்கும். வீரதீர சாகசக் கதைகள் என்றால், அது போலீஸிடமிருந்து தப்பித்த கதையாகவே இருக்கும். இந்த தாதாக்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்பது தான் நிஜம்.
பாளையங்கோட்டை மார்க்கெட் இந்த தாதாக்களின் கைவசம் தான் இருந்தது. மாமூல் வசூலிப்பது இருக்க, பெரும்பான்மை கடைகளுக்கு அவர்கள் தான் குத்தகைதாரர்களாக இருப்பர். திடீர் திடீரென்று இந்த தாதாக்களின் நகர்வலம் நடக்கும். ஆஜானுபாகுவாய், ஆட்கள் புடைசூழ அவர்கள் நடந்து வரும் பொழுது கடைவீதிகளில் தானாகவே வழி உண்டாகும். வேகவேகமாய் போவார்கள், வருவார்கள். சாதாரண நடையாய் இருக்காது. அவர்கள் போவதைப்பார்த்து, யாருக்கு இன்னைக்கு எழவுன்னு தெரியலையே என்று எல்லாரும் அங்கலாய்த்துக் கொள்வார்கள். ஒட்டுமொத்த ஊரையும் இந்த தாதாக்கள் தான் அந்த காலங்களில் ஆண்டு வந்தார்கள். சாதி அவர்களை போற்றி பாதுகாத்து வளர்த்து வந்தது. இது தான் பாளையங்கோட்டையாகவும் திரு நெல்வேலியாகவும் இருந்தது.
சாதி இல்லாமல் திரு நெல்வேலியில் எதுவும் இல்லை. இருட்டுக்கடை அல்வாவில் கூட சாதி இருக்கிறது. ஆரெம்கேவி, போத்திஸ் என்ற நவீன அடையாளங்கள் முதல் நெல்லையப்பர் என்ற பாரம்பரிய அடையாளம் வரை எல்லாவற்றிலும் சாதி ஒட்டிக்கொண்டிருக்கிறது. அந்த நாட்களில் பாளையங்கோட்டையில் சாதி வன்மங்களை தீர்த்துக் கொள்வதற்கென்று ஒரு திருவிழா இருந்தது. அதற்குப் பெயர் தசரா.
மைசூரில் விமரிசையாக நடக்குமே அதே தசரா தான். அந்த நாட்களில் மைசூருக்கு அடுத்து பாளையங்கோட்டை தான் தசராவிற்கு பெயர் போன ஊர். முகமூடித் திருவிழா நடக்கும் குலசேகர பட்டிணமெல்லாம் இப்பொழுது தான் பிரபலம். பாளையங்கோட்டையில் ஒன்பது நாளும் ஒன்பது அம்மன் கோவிலிலிருந்து சப்பரம் வரும். அம்மன் கோவில்கள் தான் என்றாலும் அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாதிக்கு உரியது. எனவே ஒன்பது நாளும் ஒவ்வொரு சாதி சப்பரம் தூக்கி வரும். சப்பரம் ஊருக்குள் வலம் வந்து காந்தி மார்க்கெட் அருகிலுள்ள ஜவஹர் மைதானத்தில் வந்து தங்கும் (காந்தி, ஜவஹர் என்று எவ்வளவு தேசபக்தியான ஊர் பாருங்கள்!). இவ்வாறு சப்பரம் தூக்கி வரும் சம்பவம் தான் தசராவில் முக்கியமானது. அந்தந்த சாதி தனது சாதிய பலத்தை காட்டிக் கொள்கிற சந்தர்ப்பம் தான் இந்த நகர்வலம். ஆனால், யாதவர் - தேவர் தாதாக்களை மீறி வேறு யாராலும் எதுவும் செய்து விட முடியாது. எல்லா சப்பர ஊர்வலத்திலும் அவர்கள் தான் பலம் காட்டுவார்கள்.
ஒவ்வொரு தசராவின் போதும் கொலை விழாமல் இருந்தது இல்லை. பாளையங்கோட்டை யாருடைய கோட்டை என்ற தாவாவில் தேவர்களும் யாதவர்களும் கூட மோதிக் கொள்வார்கள்; மார்கெட் ஏலத்தை யார் எடுப்பது என்பதில் நாடார்களுக்கும் தேவர்களுக்கும் தகராறு; அடங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்களே என்று தேவேந்திரர்கள் மீது எல்லோருக்கும் ஆங்காரம் - இவையனைத்தும் கொலைகளாகவும், ஆட்கடத்தல்களாகவும் தசரா விழாவில் நடைபெறும். தசராவில் பலம் காட்டுகிற சாதி தான் அடுத்த ஒரு வருடத்திற்கு பாளையங்கோட்டையின் ஷத்திரியர்கள்.
இந்த சூழலில் பாளையங்கோட்டையிலிருந்து உருவானவர் தான் ஜான் பாண்டியன். இம்மானுவேல் சேகரனைப் போலவே இராணுவத்தில் பணியாற்றி வந்த ஜான் பாண்டியனின் அண்ணன் செல்லத்துரை சாதி வெறியர்களால் வெட்டி சாய்க்கப்பட்டார். வன்முறையை வன்முறையால் தான் எதிர்கொள்ள முடிகிறது என்பது பெரிய கோட்பாடு ஒன்றும் இல்லை; அது நடைமுறை அரசியல். உங்களது ஆயுதத்தை நீங்கள் அல்ல உங்களது எதிரியே தீர்மானிக்கிறான் என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை. ஈழப் போராட்டத்தில் அகிம்சையை தவிர்த்து ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பதை விளங்கிக் கொண்டவர்களுக்கு ஜான் பாண்டியன் தலைமையில் தலித்துகள் ஆக்ரோஷத்தை ஆயுதமாக எடுப்பது ஏன் என்று விளங்கும்.
ஜான் பாண்டியனின் ஆஜானுபாகுவான தோற்றமும், பாளையங்கோட்டையின் கடைவீதிகளில் அவர் எழுப்பிய கர்ஜனைகளும் சாதி வெறி பிடித்தலைந்த அத்தனை பேரின் குலையையும் நடுக்கியது. தாழ்த்தப்பட்ட சமூகத்து தேவேந்திரன் ஒருவன் இப்படி வந்து நிற்க முடியும், யாரையும் எதிர்த்து பேச முடியும், எல்லோரையும் நடுங்க வைக்க முடியும் என்ற யதார்த்தத்தை புரிய வைத்தது ஜான் பாண்டியன் தான். ஏறக்குறைய எல்லா தாதாக்களுக்கும் கிலி பிடிக்கத் தொடங்கியது. தலித் ஒருவனின் கோபத்தின் முன் அவர்கள் செய்வதற்கு எதுவுமில்லாமல் போயிற்று. வருகிற தசரா விழாவில் என்ன நடக்குமோ என்பது தான் எல்லாருடைய கேள்வியாகவும் இருந்தது.
அந்தத் தசரா விழா தான் நிறைய விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சாதி தாதாக்கள் வரிசையாய் களையெடுக்கப் பட்டனர். சாதி ரௌடியாய் வாழ்வது உயிருக்கு ஆபத்தானது என்று உணர்த்தப்பட்டது. அத்தோடு தசரா விழா சாதிய விழா என்ற தோரணையை இழந்தது. அதற்குப் பின் தசரா விழாவில் சாதிப் படுகொலைகள் நடைபெறுவது இல்லை. தேவேந்திரர்களை திரு நெல்வேலியும் பாளையங்கோட்டையும் வேறு கண் கொண்டு பார்க்கத் தொடங்கியது. அதற்குப் பின் ஊருக்குள் 'பள்ளப்பயல்' என்று சொல்வதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமல் போனது. இந்தப் புதிய மாற்றத்தைக் கண்ட ஏராளமான தேவேந்திர இளைஞர்கள் ஜான் பாண்டியனின் பின்னால் திரளத் தொடங்கினார்கள். தேவேந்திர குல வேளாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது; ஊருக்கு ஊர் கிளைகள் தொடங்கப்பட்டன; கொடி வடிவமைக்கப்பட்டது; கொடிக்கம்பங்கள் நாட்டப்பட்டன; அதற்கு மரியாதை செய்யப்பட்டது. இவையனைத்தும் சாதித் திமிருக்கு எதிரான நடவடிக்கைகளாகவே நடந்தேறின.
எங்கெல்லாம் தேவேந்திரர்கள் மீது சாதிய வன்முறை ஏவப்படுகிறதோ அங்கெல்லாம் ஜான் பாண்டியன் தேவைப்பட்டார். அடிக்கிறவனை திருப்பி அடி; வெட்டுகிறவனை திருப்பி வெட்டு என்பது தான் ஜான் பாண்டியனின் ஒரே தத்துவம். ஆனால், இது தான் தேவைப்பட்டது என்பது போல் தேவேந்திரர்கள் வன்முறையை வன்முறையாலேயே எதிர் கொண்டு வெற்றி கொண்டார்கள். தென்மாவட்டக் கலவரங்கள் என்று எளிதாக சொல்லப்படுகிற விஷயங்களுக்குப் பின்னால் தேவேந்திர குல வேளாளர் சங்கம் என்ற அமைப்பின் எழுச்சியும், ஜான் பாண்டியன் என்ற நபரின் வீராவேசமும், தேவேந்திர சமூகத்தின் கோபமும் அடங்கியுள்ளது.
தலித் சமூக எழுச்சி என்பது ஜன நாயக வழியிலும், அகிம்சா முறைப்படியும் தான் நடைபெற வேண்டும் என்று கட்டாயம் ஒன்றுமில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பதும், இல்லாத பட்சத்தில் வாய்மூடி மௌனம் சாதிப்பதும், நடு நிலையாளர்கள் போல் நடிப்பதும் சாதிய சர்வாதிகாரத்தின் இன்னொரு வடிவமாகத் தான் தோன்றுகிறது. நீங்கள் வந்து அரசியல் படுத்தும் வரை தலித்துகள் தேமே என்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், நீதிமன்றம் அல்லது சட்டமன்றம் / பாராளுமன்றம் மூலமே அவர்கள் தங்களது நீதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போதிப்பதும் சுயசாதிக் கரிசனமாகவே எனக்குத் தெரிகிறதே ஒழிய தலித்துகள் மீதான கருணையாகத் தோன்றவில்லை.
ஈழத்தில் நடைபெறுகிற ஆயுதம் ஏந்திய போராட்டத்தை ஆதரிக்க முடிகிற 'தமிழ் பற்றாளர்களால்' தேவேந்திரர்களின் போராட்டத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பது சாதி வெறியைத்தவிர வேறு என்ன? மாவோயிஸ்டுகளின் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை இங்கிருந்து ஆதரிக்க முடிகிறவர்களால் ஜான் பாண்டியனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் அது சாதித் திமிரில்லாமல் வேறு என்ன? பனானின் 'வன்முறையை' வாய்கிழியப் பேசுகிறவர்களால், மால்கம் எக்ஸை பற்றி உரையாற்றுபவர்களால் இந்த மக்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அது களவாணித்தனம் தவிர வேறு என்ன? கொடியன் குளம், தாமிரபரணி, பரமக்குடி என்று தொடர்ச்சியாக அரச பயங்கரவாதம் இந்த தலித் மக்கள் மீது ஏவப்படும் போது 'நடு நிலைமையாய்' பேச விரும்பும் ஊடகங்களை என்ன செய்தால் தகும்?
1990 கள் வரை சக சாதிகளின் வன்முறையை எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கும் தேவேந்திரர்கள் அதன் பின் எதிர் கொண்டது அசுர பலம் கொண்ட அரசு இயந்திரத்தின் வன்முறையை. நவீன தளவாடங்களோடு, கட்டுக்கோப்பான அமைப்போடு, திட்டமிட்டு செயல்படும் காவல்துறையின் வன்முறைக்கு முன் அது பரமக்குடியில் மூன்றாவது முறையாக தோற்றுப் போயிருக்கிறது. அரச பயங்கரவாதத்தை எதிர் கொள்வதற்கான முன்யோசனையோ திட்டமோ தேவேந்திரர்களிடம் இருக்கவில்லை. ஆனால், நிலமை இப்படியே தான் இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. மரபான சாதி வன்முறைக்கு எதிராக ஜான் பாண்டியனை அச்சமூகம் உருவாக்கிக் கொண்டது போல், காவல்துறையின் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அது எதையாவது உருவாக்கிக் கொள்ளாதா என்ன? அப்படி ஒன்று உருவானால், இந்த அரசு அதைத் தாங்குமா என்று தான் தெரியவில்லை.

6 comments:

Devendra Mallar said...

தலித் என்ற வார்த்தையை தவிர்க்கவும் . அழகான விளக்கம். ஆனால் தேவேந்திர குல வெள்ளாளர் சங்கம் உருவான தகவல் திருநெல்வேலியில் என்று குறிப்பிடவும் . முதுகுளத்தூர் பேரையூர் போன்ற இடங்களில் 1901 லேயே சங்கமாக பதிவு செய்யப்பட்டு பள்ளர்களின் முன்னேற்றத்திற்க்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. தேவரை விட ரௌடி யார் இருக்க முடியும்? பல கொலை வழக்குகள் ! அண்ணாதுரை, காமராஜ் போன்றவர்கள் பற்றிய அவர் விமர்சனங்களை படிக்க நா கூசும். அவரையே தெய்வ திருமகன் என்று அந்த இனம் சொல்லும் போது ஜான் பாண்டியனை தெய்வத்தின் தெய்வ மகனாக நாம் அழைக்க முடியும். தற்போது நம் உத்தியை மாற்ற வேண்டும் . பழைய முறையை தவிர்த்து புது வியூகம் அமைக்க வேண்டும். ஜான் பாண்டியன் நம் இன உண்மையான அறிவாளிகளை கலந்தாலோசித்து ஒரு தீர்க்கமான சரியான வெற்றி பெறக் கூடிய வழியை சட்ட திட்டத்திற்குள் உட்பட்டு எடுத்தால் மாபெரும் மாற்றத்தை அவரால் உருவாக்க முடியும். சாண்டில்யன் உருவாக்கிய அரசாட்சியை விவேகமுடன் யோசித்தால் ஜானால் மட்டுமே உருவாக்க முடியும். சாணக்கிய வழியில் அவர் பயணம் செய்தால் எவரும் அவர் அருகில் வர முடியாது. நன்றி அன்பரே சந்தர்ப்பத்திற்கு.

Unknown said...

சூப்பர் அண்ணாdeventhira Mallar.

Unknown said...

சூப்பர் அண்ணாdeventhira Mallar.

mani said...

super nalla velakkam, aduthu naam enna seiya vendum enpathai nam ina makkalukku sollavendum

கார்த்திகேயன் மணி said...

சரி தான்

Unknown said...

தலித் என்ற வார்த்த தேவையில்ல