Monday, September 12, 2011

மதுரையிலும் பரவியது கலவரம்: தென் மாவட்டங்களில் போலீஸார் குவிப்பு

மதுரையிலும் பரவியது கலவரம்: தென் மாவட்டங்களில் போலீஸார் குவிப்பு

Madurai
மதுரை: பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தின் எதிரொலியாக மதுரையிலும் கலவரம் வெடித்தது. இதையடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கொந்தகையைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் லாரி ஒன்றில் பரமக்குடிக்குக் கிளம்பினர். இவர்கள் மதுரை-ராமநாதபுரம் ரிங் ரோட்டில் சிந்தாமனி அருகே வந்தனர். அப்போது அங்கிருந்த சோதனைச் சாவடியில் போலீஸார் அவர்களை மறித்து நிறுத்தினர்.

அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், லாரியில் வந்தவர்களிடம் இப்படி கூட்டமாக லாரியில் போகக் கூடாது, திரும்பிச் செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் அதைக் கூட்டத்தினர் கேட்கவில்லை. சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பின்னர் கூட்டத்தினர் திரும்பிச் சென்றனர்.

ஆனால் போன சிறிது நேரத்திலேயே அவர்கள் கூடுதல் ஆட்களுடன் மீண்டும் வந்தனர். இதையடுத்து போலீஸார் மறுபடியும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கூட்டத்தினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. அப்போது சிலர் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் பெண் போலீஸ்காரரர் ஒருவர் மீது சிலவற்றை தூக்கி வீசினர். இதனால் போலீஸார் தடியடியில் இறங்கினர்.

ஆனால் கூட்டத்தினர் கலையவில்லை. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் மதுரையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவருக்கு இடுப்பு விலாவில் பாய்ந்த குண்டு வயிற்றைத் தாக்கி வெளி வந்தது. இன்னொருவருக்கு கையில் குண்டு பாய்ந்தது.

இந்த மோதல் காரணமாக அந்த சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குண்டுக் காயமடைந்த இருவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

பரமக்குடி, பார்த்திபனூர், மதுரை என முக்கியப் பகுதிகளில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியத் தலைவர்கள் சிலைகள், பதட்டமான பகுதிகளில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேவைப்படும் இடங்களில் கலவரத் தடுப்புப் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமாவட்டத்தினரை வெளியேற்ற நடவடிக்கை

அதேபோல சம்பந்தம் இல்லாமல் தங்கியுள்ள வெளிமாவட்டத்தினரை அடையாளம் கண்டு வெளியேற்றுமாறும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments: